தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களின் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்: அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் - madhurai news

அர்ச்சகர் உள்ளிட்ட திருக்கோயில்களின் அனைத்து நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டு சட்டவிதிகளைப் பின்பற்ற வேண்டும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மதுரை
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் தொடுத்த வழக்கில் திருப்புமுனை

By

Published : Mar 13, 2021, 5:32 PM IST

Updated : Mar 13, 2021, 8:16 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்திருந்தும், கடந்த 14 வருடங்களாக 203 பிராமணரல்லாத மாணவர்களாகிய நாங்கள் அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்காமல் காத்திருக்கிறோம். எமது பணி நியமனத்திற்காக போராடுவது மட்டுமின்றி, திருக்கோயில் பணி நியமனங்களில் பார்ப்பனரல்லாதோருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் போராடி வருகிறோம்.

இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் சமையல் மற்றும் நைவேத்தியம் ஆகிய பணியிடங்களுக்கு பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவப்பு, கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தோம். அவ்வழக்கு மார்ச் 4ஆம் தேதி, தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எங்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் திரு. பிரபு ராஜதுரை ஆஜரானார். திருக்கோயில் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் அந்த அறிவிப்பாணை திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் வழக்கானது முடித்து வைக்கப்பட்டது.

ஏற்கனவே, இதே போன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், பிராமணர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிவிப்பாணைகள் வெளிவந்த போதும், உயர் நீதிமன்றத்தினை நாடி இடைக்கால உத்தரவுகளைப் பெற்றோம். பின் எங்களது வழக்குகளின் காரணமாக அவை திரும்பப் பெறப்பட்டன. திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள் இவ்வாறு சட்டவிரோத பணிநியமன அறிவிப்பாணைகளை வெளியிடுவதும், நாங்கள் வழக்கு போட்டவுடன் திரும்ப பெறப்பெறுவதும், தொடர் நடவடிக்கையாக மாறியுள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாடு அரசும், இந்து அறநிலையத் துறையும், அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பிராமணர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என சாதி அடிப்படையில் திருக்கோயில் பணிநியமனங்கள் செய்யப்படுவதைத் தடுத்திட வேண்டும்.

அவ்வாறு, அறிவிப்பாணைகள் வெளியிடும் அறநிலையத்துறை அலுவலர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். இது போன்ற ஒவ்வொரு அறிவிப்பாணையும் பார்ப்பனரல்லாத மக்களின் மீதான சாதிய இழிவை நிலைநிறுத்தும் செயல் என்பதால் தமிழ்நாடு விழிப்பாக இருந்து இதனைத் தடுத்திட வேண்டும் என உரிமையுடன் கோருகிறோம்.

தமிழ்நாடு அரசால், அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு நியமனத்திற்காக காத்திருக்கும் இதர பிரிவினர்கள் 203 அர்ச்சக மாணவர்களுக்கும், அர்ச்சகர் பணி நியமனங்களை உடனே வழங்க வேண்டும். அர்ச்சகர் உள்ளிட்ட திருக்கோயில்களின் அனைத்து நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டு சட்டவிதிகளைப் பின்பற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கள் நடத்தப்படும் - இந்து சமய அறநிலைய துறை

Last Updated : Mar 13, 2021, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details