மதுரை திருப்பரங்குன்றம் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளுக்கான உணவுப் பொருட்களை தோப்பூரில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து லாரியில் எடுத்துச் செல்லும் ஒப்பந்தத்தை சிம்மக்கல்லைச் சேர்ந்த ராமர் என்பவர் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 23ஆம் தேதி ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதாகக் கூறி திருப்பரங்குன்றம் காவல் துறையினர் அவரது லாரியை பறிமுதல் செய்து மதுரை டிஆர்ஓவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து தனது லாரியை விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் காணொலி காட்சி மூலம் விசாரணை செய்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ரேஷன் பொருட்கள் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்ட நேரம் வேறு. ஆனால், இரவு நேரத்தில் 15 அரிசி மூட்டைகள் பிடிபட்டது என வாதிட்டார்.