மதுரை:புதுக்கோட்டை அறந்தாங்கியைச் சேர்ந்த கவிவர்மன் என்ற சுரேஷ் கண்ணா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி 11 வயது சிறுவர் மீது, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
நான்கு நாட்களுக்குப் பிறகு அச்சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார்.
அதுபோல சக்தி வாய்ந்த துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்திய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துப்பாக்கி சுடும் மையத்தை மூட கோரிக்கை
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் மரணத்தை விசாரிக்கவும், சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கவும் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், "கடந்த டிசம்பர் 30ஆம் தேதியே நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் அத்தளம் பயன்படுத்தப்பட மாட்டாது" என உறுதி அளிக்கப்பட்டது.
இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை தள்ளிவைக்க சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கை