மதுரை மாவட்டம் வாழைத்தோப்பைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன்கள் இதயக்கனி, சந்தோஷ், ரமேஷ். இதயக்கனி இதே ஊரைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகளை காதலித்து வந்தார். கடந்த மாதம் இதயக்கனியும் அவரது காதலியும் தலைமறைவாகினர்.
இதனால், தனது மகளை காணவில்லை என சாப்டூர் காவல் நிலையத்தில் பாண்டி புகாரளித்தார். புகாரைத் தொடர்ந்து, இதயக்கனி குறித்து கன்னியப்பன் குடும்பத்தினரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
அதன் ஒருபகுதியாக இதயக்கனி குறித்து விசாரிக்க அவரது இளைய சகோதரர் ரமேஷை(19), சாப்டூர் காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
இதற்கிடையில், நேற்று காலை பெருமாள் குப்பம் மலையில் ரமேஷ் தூக்கில் தொங்கியவாறு கண்டறியப்பட்டார். இதையடுத்து ரமேஷை காவல் துறையினர் அடித்துக்கொன்றதாகக் கூறி அவரது உடலை காலை 6:30 மணி முதல் மதியம் 3:00 மணி வரை எடுக்கவிடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.