பட்டுக்கோட்டை மாவட்டம், கோகுல் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நானும் எனது நண்பர் ஜின்னாவும், கடல் சிப்பிகள், குண்டுகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தோம்.
அந்தப் பகுதியில் ரோந்து வந்த பட்டுக்கோட்டை காவல் துறையினர் எங்களை வழிமறித்துச் சோதனை செய்தனர். அப்போது எங்களிடமிருந்து கடல் சிப்பிகள் தடை செய்யப்பட்டவை எனக் கூறி அவற்றைப் பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல், பட்டுக்கோட்டை வன அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் எங்கள் மீது வன உயிரினம் மற்றும் வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் நாங்கள் பட்டுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டோம். கடல் சிப்பிகளை வன உயிரின ஆராய்ச்சி மையத்திற்கு அலுவலர்கள் சோதனைக்கு அனுப்பினர். ஆராய்ச்சி முடிவில், பறிமுதல் செய்யப்பட்டவை தடை செய்யப்பட்ட கடல் சிப்பிகள் இல்லை என தெரியவந்தது. ஆனால், தடை செய்யப்பட்ட கடல் சிப்பிகளைக் கடத்தியதாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பறிமுதல் செய்யப்பட்ட கடல் குண்டுகள், சிப்பிகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டவை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவர் மீதும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு