குமரி மாவட்டம் பேச்சிப்பாறையைச் சேர்ந்த வைரவன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"குமரி மாவட்டத்தில் காணிக்காரன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி, அந்த சமயத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்து சமயத்தை பின்பற்றும் போது பெறப்பட்ட சாதிச்சான்றிதழை பயன்படுத்தி, 1996ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சட்டப்படி ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய சமூகத்தை பின்பற்றும்போது அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றே சான்றளிக்கப்படுகிறது. ஆகவே, அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்படும் வார்டுகளில் போட்டியிட இயலாது. ஆனால் பேச்சிபாறையைச் சேர்ந்த ராஜன் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினாலும், தொடர்ந்து நான்கு முறை அதனை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சலுகைகளை பயன்படுத்தி வந்துள்ளார். அதனை அலுவலர்களும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆகவே வரும் உள்ளாட்சி தேர்தலில் குறிப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகளில் போட்டியிடுவோரின் சாதிச்சான்றிதழ், அவற்றின் உண்மைத் தன்மையை சரிபார்க்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கு மதம் மாறியவர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.