சென்னை: சென்னை தியாகராயநகரில் இருந்த எஸ்.ஜி.சூரயாவை மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் (17.06.2023) நள்ளிரவில் கைது செய்தனர். அவர் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக விசாரித்த போது மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சமூகவலைத்தள பதிவு காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன். இவர் மலம் கலந்த நீரில் தூய்மைப் பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்யச் சொன்னதாகவும், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அந்த தொழிலாளி இறந்துவிட்டதாகவும் எஸ்.ஜி.சூர்யா குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை கண்டு கொள்ளாமல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் பாஜக மாநிலச் செயலாளராக இருக்கும் எஸ்.ஜி. சூர்யா என்பவர் தன்னுடைய ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் பதிவிட்டு வந்துள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 12ஆம் தேதி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில் "மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே கிடையாது. விஸ்வநாத் என்ற கவுன்சிலரும் கிடையாது. அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறாதபோது வதந்தியைக் கிளப்பி, சமூக பதற்றத்தை ஏற்படுத்தி சாதி ரீதியான மோதலைத் தூண்டுவதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு செய்திகளை பாஜக நிர்வாகியான எஸ்.ஜி.சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. இதன் பேரிலேயே எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது குறித்து தகவல் அறிந்த பாஜகவினர் சென்னை எழும்பூரில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்.ஜி.சூர்யா கைது குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை எனவும், தமிழக பாஜகவை பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி அருகே உள்ள ஈ.வெ.ரா. சாலையில் அமர்ந்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரபப்பு ஏற்பட்டது.