மதுரை:இந்தியாவின் முக்கியமான ஆன்மீக தலங்களான ஹரித்துவார் மற்றும் வாரணாசி உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும்,இந்த ரயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு மதுரை வழியாக மேற்கண்ட இடங்களுக்குச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி ரயில் செல்லும் இடங்களான உஜ்ஜைன், ஹரித்துவார், வாரணாசி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள முக்கிய கோயில்களை சுற்றிப்பார்பதற்கு பாரத் கௌரவ் சிறப்புச் சுற்றுலா ரயில் ஐ.ஆர்.சி.டி.சி -யின் தென்மண்டலம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டலம் சார்பில் 'ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை' என்ற பெயரில் உஜ்ஜைன், ஹரித்துவார், ரிஷிகேஷ், வாரணாசி மற்றும் கயா உள்ளிட்ட 5 இடங்களில் அமைந்துள்ள முக்கிய கோயில்களைச் சுற்றிப்பார்க்க 12 நாட்கள் பயணத்துடன் பாரத் கௌரவ் சிறப்புச் சுற்றுலா ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் கேரளா மாநிலம் கொச்சுவேலியிலிருந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படும் ரயிலானது திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக உத்தரபிரதேசம் மாநிலம் பனாரஸ் வரை இயக்கப்படுகின்றது.
இந்த சுற்றுலா ரயிலில் பயணிப்பவர்களுக்கு உள்ளூரைப் பார்வையிடுவதற்கான போக்குவரத்து வசதி, ரயில் பயணத்தின் போது சைவ உணவு, பயண காப்புறுதி என உள்ளடக்கிய படுக்கை வசதியுடன் நபர் ஒருவருக்கு 22 ஆயிரத்து 350 ரூபாய் மற்றும் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன படுக்கை வசதியுடன் நபர் ஒருவருக்கு 40 ஆயிரத்து 380 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மூன்று குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பெட்டிகளும், எட்டு படுக்கை வசதி பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும்,இந்த ரயிலில் பயணிக்க விருப்பமுள்ளவர்கள் www.irctctourism.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இது தொடர்பான விபரங்களுக்கு 9003140680/682, மதுரை 8287932122, திருச்சி 8287932070, கோயம்புத்தூர் 9003140655 என மேற்குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:D50 படத்தின் அப்டேட் வந்தாச்சு.. மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ்