மதுரை :தமிழ்நாடு தொல்லியல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், “ கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுப்பணிகள் செப்டம்பரில் நிறைவடையும். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வு, வெம்பக்கோட்டை & துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளும் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நிறைவடையும். புதிய கற்கால இடங்களைக் கண்டறியும் கள ஆய்வு, கிழக்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சங்ககால கொற்கை துறைமுகத்தின் கடலோரத்தில் முன்கள ஆய்வுப் பணிகள் ரூ.1.5 கோடியில் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்றை அறிவியல் அடிப்படையில் மாற்றி எழுத தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
16 தொல்லியல் அகழ்வைப்பகங்களில் அகழாய்வின்போது கிடைக்கும் அரிய தொல் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கீழடியில் புதிய அகழ்வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும். மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அகழ்வைப்பக மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
மாநிலம் முழுவதும் 25,243 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு, அவற்றின் மைப்படித்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில் 13,201 கல்வெட்டுகள் படிக்கப்பட்டுள்ளன. 8,599 கல்வெட்டுகள் நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை 21 லட்சம் ஓலைச்சுவடி பக்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இதில் 3,500 ஓலைச்சுவடி கட்டுகளில் 5 லட்சம் மின்னணுப் பக்கங்கள் www.tnarch.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள் ...