தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பார் கவுன்சில் கிளை விரைவில் தொடக்கம்!

மதுரை: தென் மாவட்ட வழக்குரைஞர்கள் வசதிக்காக மதுரையில் பார் கவுன்சில் கிளையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பார் கவுன்சில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை பார் கவுன்சில் கிளை
மதுரை பார் கவுன்சில் கிளை

By

Published : Aug 29, 2020, 5:16 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சென்னையில் செயல்படுகிறது. பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்குரைஞர்களில் மூன்றில் ஒரு பங்கு வழக்குரைஞர்கள், தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதனால் தென் மாவட்ட வழக்குரைஞர்களின் வசதிக்காக பார் கவுன்சில் கிளையை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அமைக்க வேண்டும் என, பார் கவுன்சில் உறுப்பினர்களும், இணைத் தலைவருமான பி.அசோக், ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் ஜி. தாளை முத்தரசு ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அண்மையில் நடைபெற்ற பார் கவுன்சில் கூட்டத்தில், மதுரையில் பார் கவுன்சில் கிளையை அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உயர் நீதிமன்றக் கிளையில் பார் கவுன்சில் கிளை அமைக்க இடம் ஒதுக்க சென்னை உயர் நீதிமன்ற கட்டுமானக் குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஜி.தாளை முத்தரசு கூறியதாவது: உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களின் வழக்குரைஞர்கள் பார் கவுன்சில் அடையாள முத்திரை, அடையாள அட்டை, சான்றிதழ் பெற சென்னைக்கு சென்று வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

இதனால் தென் மாவட்ட வழக்குரைஞர்களுக்கு வசதியாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் கிளையை உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் நிறுவ வேண்டும் என, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்ட வழக்குரைஞர்கள் வசதிக்காக இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, மதுரையில் பார் கவுன்சில் கிளையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றக் கிளை வளாகத்தில் இடம் வழங்கியதும், அதில் ஒரே நேரத்தில் 200 வழக்குரைஞர்கள் பதிவு செய்யும் வகையில் அரங்கு, கூட்ட அரங்கு, விசாரணை அறை, அலுவலக அறை என அனைத்து வசதிகளுடன் பார் கவுன்சில் கிளை கட்டப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details