மதுரை திருமங்கலம் பகுதியில் வாழை மரங்கள் பூச்சித் தாக்குதல் பாதிப்புக்கு உள்ளாகின. இதனால் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், தோட்டக்கலை துறையினர், பூச்சியியல் துறையினர், வேளாண்துறை ஆய்வாளர்கள் ஆகியோர் திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வாழை மரங்கள், விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.
பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்ததாவது, "மதுரையில் வாழை மரங்களில் பூச்சித் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இதனை முதலமைச்சர் பழனிசாமி கவனத்திற்கு எடுத்துச் சென்று வேளாண்மை துறை ஒத்துழைப்போடு திருமங்கலம் கல்லுப்பட்டி பகுதியில் நேரடியாக வந்து ஆய்வு செய்தோம்.
மண்ணின் ஊட்டச்சத்து குறைபாடால் வாழை மரங்கள் கருகின்றன அதில், பூச்சித் தாக்குதல் என்பதை உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து வாழை விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. மேலும் எதற்காக இப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வுகள் மேற்கொண்டதில் மண்ணின் ஊட்டச்சத்தை பொறுத்து நுண்ணூட்டச்சத்து கொடுக்க வேண்டியுள்ளது. இப்படி நுண்ணூட்டச் சத்து குறைவது மூலம் இதுபோன்ற பாதிப்புகள் வாழை மரங்களுக்கு ஏற்படுகின்றன.
யூரியா, பொட்டாசியம், ஜிங்க் சல்பேட், நுண்ணூட்டச்சத்து கலவைகள் இவற்றையெல்லாம் ஒரு மரத்திற்கு 250 கிராம் என்ற விகிதத்தில் உரங்கள் இட்டால் இதற்கான தீர்வு கிடைக்கும்" என்றார்.
இதையும் படிங்க: கிராமங்கள் அதிவேக இணையதளம் மூலம் இணைக்கப்படும் - அமைச்சர் ஆர்.பி.யு.