மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “நான் கடந்த 2014ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் சார்பு - ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தேன். அப்போது எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அல்லா பிச்சை மகன் செய்யது முகம்மது (24) என்ற மோட்டார் சைக்கிள் மெக்கானிக் மீது ஒருவர் திருட்டு புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க எஸ்.பி.பட்டினம் போலீசார் 14.10.2014-இல் செய்யது முகம்மதுவை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரணை அதிகாரியான நான் விசாரணை நடத்தியபோது, செய்யது முகம்மது அருகே கிடந்த கத்தியால் என்னை கொலை செய்யும் நோக்கோடு தாக்க வந்தார். நான், என்னை தற்காத்துக் கொள்வதற்காக என்னிடம், இருந்த துப்பாக்கியால் சுட்டேன். இதில் செய்யது முகம்மதுவின் இடது மார்பில் குண்டு பாய்ந்தது. அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் 16.10.2014-இல் உத்தரவிட்டது.
இந்த வழக்கை ராமநாதபுரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து, என் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து நான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.