மதுரை:தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த போட்டியைப் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.
முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. காலை 7 மணிக்குத் தொடங்கிய போட்டியானது மாலை 5மணி வரை நடைபெற்றது. மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 435 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்,மேலும் 817 காளைகளும் அவிழ்க்கப்பட்டது.
இறுதிச் சுற்று:9 சுற்றுகளின் முடிவில், குறைந்தது 5 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாகக் களமாடிய காளைகள் மற்றும் வீரர்களுக்கு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோர் தங்கக் காசுகளை வழங்கினர். இந்த போட்டியில் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், திருமாவளவன் ஆகியோர் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைகள் வெற்றி பெற்றன.
முதல் பரிசு:போட்டியின் போது திறம்பட விளையாடி, 17 காளைகளை அடக்கிய மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதல் பரிசினை வென்றார். இதனையடுத்து அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் பரிசாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து சிறந்த காளையாக அவனியாபுரத்தைச் சேர்ந்த மறைந்த ஜீ.ஆர்.கார்த்திக் என்பவரின் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் மற்றும் மேயர் சார்பாகக் கறவை பசுவும் பரிசாக வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்குத் தங்கம், வெள்ளிக் காசுகள் ,குக்கர், கட்டில், சைக்கிள் , சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
எதிர்ப்பு:இதனைத்தொடர்ந்து 2 ஆவது மற்றும் 3 வதாக சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்குப் பரிசுகள் அறிவிக்கப்படாத நிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு களத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இரண்டாம் இடம் பிடித்த மாடு பிடி வீரர் ரஞ்சித் குமாருக்கு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சீனிவாசனின் காளைக்கு, ஒரு பீரோ மற்றும் சைக்கிள் பரிசாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருள்களும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் வழங்கினர்.
9 பேர் தீவிர சிகிச்சை:விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், தலைமைக் காவலர், சார்பு ஆய்வாளர் உட்பட 51 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாடுபிடி வீரர்கள் 22 பேர், காளை உரிமையாளர்கள் 25 பேர், பார்வையாளர்கள் இரண்டு பேர், காவலர்கள் இரண்டு பேர் என மொத்தம் 48 பேர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காயமடைந்துள்ளனர். இந்த போட்டியின்போது 2400 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மாடுபிடி வீரர் கார்த்தி:இது குறித்து17 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான கார்த்தி பேசுகையில், "என்னுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்னுடைய பெற்றோர்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால். தற்போது வரை அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. ஐபிஎல் போட்டிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஜல்லிக்கட்டு இல்லை" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:திருச்சியில் சமத்துவ பொங்கல் விழா : தாரை தப்பட்டை முழங்க கொண்டாடிய அமைச்சர் கே.என்.நேரு!