கிராமப்புறங்களில் விவசாயிகளின் வீடுகளில் 'குறுந்தாழி' எனப்படும் குழுமைகள் வைத்து, அதில் நெல்லை பாதுகாத்து வந்தனர். இந்தக் குழுமைகள் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். இவற்றின் அடிப்பாகம் குறுகியதாகவும் மேற்பாகம் அகன்றும் அமைந்திருக்கும். அடிப்பாகத்தில் வட்ட வடிவத் துளை ஒன்று அமைக்கப்பட்டு, தேவைக்கேற்ப தானியங்களை அதன் வழியே பெறுவதற்கான நுட்பத்தை கொண்டிருக்கும்.
பூச்சிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு முறையும் இவற்றில் சாணம் பூசி பழங்கால மக்கள் பராமரித்தனர். கிராமங்களிலுள்ள பல்வேறு வீடுகளில் குழுமைகள் தெய்வங்களாகக் கருதப்பட்டு வழிபடப்பட்டதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். விளைச்சல் காலங்களில், விவசாயிகள், வீடுகளிலேயே குழுமை அமைத்து, நெல்லை சேமித்து வைத்தனர். அதிகபட்சம், 600 கிலோ வரை பாதுகாக்கும் வகையில், பெரிய குழுமைகளும் இருந்தன.
சங்க இலக்கியங்களில் கூறப்படும் 'கலம் செய் கோ' எனப்படும் மண்பாண்டங்கள் செய்பவர்களின் கைவண்ணத்தில் அவை மிளிர்ந்தன. வானம் பொய்த்து நீர் சேமிப்பு குறைந்த பின், காலங்கள் செல்ல செல்ல நெல் சேமிக்கும் குழுமைகளின் தேவையும் குறைந்து விட்டன. வறட்சியின் காரணமாக நெல் விளைச்சலின்றி, விவசாயிகளின் வீடுகளில் நெல் சேமிக்கும் குழுமைகள் காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன.