மதுரை:அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற இந்தப் பெயரை தமிழர்கள் ஒருபோதும் மறக்க இயலாது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடத்தியதுடன், தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்ததில் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
கீழடியில் தான் மேற்கொண்ட இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகளையும் முழுவதுமாக மக்கள் மையப்படுத்தி, அதன் பெருமைகளை உலகமெலாம் கொண்டு செல்ல அரும்பாடுபட்டவர். பல்வேறு காரணங்களுக்காக இந்திய தொல்லியல் துறை அவரை அஸ்ஸாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது. அங்கிருந்து கோவாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அங்கு தனது பணியை மேற்கொண்டு வந்தார்.
மீண்டும் தமிழ்நாட்டில்..
இந்நிலையில் இந்திய தொல்லியல்துறை சென்னை வட்டத்திலுள்ள தென்னிந்திய கோயில்கள் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சற்றேறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் பணியாற்றவுள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களின் அடையாளம் கோயில்கள்
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக பேசுகையில், "இந்திய தொல்லியல் துறையால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தப் பணியால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அடையாளம் என்றால் அது கோயில்களும், அதன் கட்டமைப்புகளும் தான். இந்தக் கோயில்களில் பெரும்பாலானவை தொல்லியல் துறையால் ஆவணமாக்கப்பட்டிருந்தாலும், மேலும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.