தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரிட்டாபட்டி: அழியா பல்லுயிர் பாரம்பரியத்தின் நுழைவாயில் - தொல்லியலின் அடையாளம் - Madurai Arittapatti village

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய வாழ்விடமாக, தமிழ்நாடு அரசு அறிவித்த 'அரிட்டாபட்டி' கிராமத்தின் தொல்லியல் அடையாளங்களையும், 2000 ஆண்டுகள் பழமைமிக்க வரலாற்றுச் சான்றுகளையும், உயிர்க்கோள மலை குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

arittapatti biodiversity heritage
arittapatti biodiversity heritage

By

Published : Nov 24, 2022, 7:27 AM IST

Updated : Nov 24, 2022, 3:24 PM IST

மதுரை: தமிழ்நாட்டின் ’முதல் பல்லுயிர் பாரம்பரிய வாழ்விடம்' ஆக அறிவிக்கப்பட்டுள்ள 'அரிட்டாபட்டி கிராமம்', பல்வேறு வரலாற்றுச் சான்றுகளையும், தொல்லியல் அடையாளங்களையும் கொண்டு திகழ்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்ட இக்கிராமத்தின் உயிர்க்கோளமான 'மலை'யைப் பாதுகாக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் மக்கள் நடத்திய போராட்டத்தின் வெற்றியே தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு. இது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

அரிட்டாபட்டியும் அதன் தனிச்சிறப்பும்:மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்கம்பட்டியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம் தான், அரிட்டாபட்டி. தற்போதுள்ள அரிட்டாபட்டி என்ற பெயர், சமண சமயத்தின் 22ஆவது தீர்த்தங்கரரான 'நேமிநாதர்' என்ற அரிட்டநேமியின் பெயரால் அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அரிட்டாபட்டியாக மருவியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இங்குள்ள மலைக்கு மேற்புறம் அமைந்த கி.பி.9ஆம் நூற்றாண்டுக் 'குடைவரைக் கோயில்' இருப்பது தனிச்சிறப்பு மிக்கது. சிவபெருமான் லிங்க வடிவத்தில் அமைந்துள்ள கருவறையுடன், பாசுவமதத்தைத் தோற்றுவித்த லகுலீசரின் சிற்பம் அக்குகைக்கோயிலின் இடதுபுறம் அமைந்துள்ளது தமிழ்நாட்டின் தனிச்சிறப்பாகும்.

கி.மு முதல் நூற்றாண்டு 'தமிழி' கல்வெட்டு:இங்குள்ள மலைத்தொடர் 'கழிஞ்சமலை' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இதன் பழமையான பெயர் 'திருப்பிணையன் மலை' என்பதாகும். இந்த மலையின் வடக்குப்புறம் அமைந்துள்ள இயற்கையான குகைத்தலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டைச்சேர்ந்த 'தமிழி' கல்வெட்டு உள்ளது. அதில், 'நெல்வேலி செழியன் அதினன் வெளியன்' என்பவன் இங்குள்ள படுக்கைகளைச் செய்து கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமர்ந்த நிலையில் சமண (ஜைனர்) தீர்த்தங்கரரின் உருவம் ஒன்று புடைப்பு சிற்பம்
'அரிட்டாபட்டி' கிராமத்தின் தொல்லியல் அடையாளங்கள்
கி.பி.9ஆம் நூற்றாண்டு குடைவரைக் கோயிலில் உள்ள லிங்க வடிவ சிவபெருமான்
அரிட்டாபட்டி: அழியா பல்லுயிரிய பாரம்பரியத்தின் நுழைவாயில்

வியக்கவைக்கும் குடைவரை கோயில் சிற்பம்:அக்குகைத்தலத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே, அர்த்த பரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் சமண (ஜைனர்) தீர்த்தங்கரரின் உருவம் ஒன்று புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அச்சணந்தி என்ற முனிவர் இதனைச் செய்வித்துள்ளார். திருப்பிணையன்மலையிலுள்ள பொற்கோட்டு கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இந்தத் திருமேனிக்கு பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதன் கீழுள்ள தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இச்சிற்பத்திற்கு அக்காலத்திலேயே, வண்ணம் தீட்டியுள்ளனர். அதன் எச்சங்கள் இப்போதும் காணப்படுகின்றன.

நீர்வளமும் அதன் செழுமையும்:அரிட்டாபட்டி ஏழுமலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளரும், அரிட்டாபட்டி பறவைகள் மற்றும் பல்லுயிரிய பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான ரவிச்சந்திரன் கூறுகையில், 'தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய இடமாக அரிட்டாபட்டியை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களது நன்றி. சேர்ந்தாற்போன்று அமைந்த நீர்நிலையும் மலையும் பல்லுயிர்ச்சூழலுக்கு ஏதுவாக உள்ளன. இதனால் மரம், செடி, கொடி மட்டுமன்றி, அவற்றைச் சார்ந்து பறவைகள் விலங்குகளும் செழிப்பாக உள்ளன. ஊரின் பசுமைப்போர்வைக்கு இந்த உயிரினங்களே ஆதாரம்.

மனிதர்களின் வாழ்வியலுக்கு, பல்லுயிர்களே முதன்மையான ஆதாரமாகத் திகழ்கின்றன. எங்களது அரிட்டாபட்டி மக்களின் தற்சார்பு வாழ்வியலை உறுதி செய்வதற்காகவே, இயற்கையான இந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பெரிதும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இவையனைத்தையும் ஆவணப்படுத்த பெரிதும் முயற்சி மேற்கொண்டோம். அப்போதுதான், அரிட்டாபட்டியின் உண்மையான பரிமாணத்தை எங்களால் உணர முடிந்தது. இங்கு இயல்பாகவே நிலவும் உயிரினச் சங்கிலியைப் பாதுகாக்க அரிட்டாபட்டி பொதுமக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அரிட்டாபட்டியை வாழ்விடமாகக் கொண்ட அரிய பறவையினங்கள்..
அரிட்டாபட்டியை வாழ்விடமாகக் கொண்ட அரிய பறவையினங்கள்..
அரிட்டாபட்டியை வாழ்விடமாகக் கொண்ட அரிய பறவையினங்கள்..
அரிட்டாபட்டியை வாழ்விடமாகக் கொண்ட அரிய பறவையினங்கள்..
அரிட்டாபட்டியை வாழ்விடமாகக் கொண்ட அரிய பறவையினங்கள்..
அரிட்டாபட்டியை வாழ்விடமாகக் கொண்ட அரிய பறவையினங்கள்..
அரிட்டாபட்டியை வாழ்விடமாகக் கொண்ட அரிய பறவையினங்கள்..
அரிட்டாபட்டியை வாழ்விடமாகக் கொண்ட அரிய பறவையினங்கள்..
அரிட்டாபட்டியை வாழ்விடமாகக் கொண்ட அரிய பறவையினங்கள்..

அரியவகை 'லகடு வல்லூறு' கழுகினம்:அழியக்கூடிய தருவாயில் உள்ள உயிரினங்களை 'என்டேஞ்சர்டு ஸ்பீஸிஸ்' (Endangered Species) என அறிவித்து அவற்றைப் பாதுகாக்க இந்திய அரசு சட்டங்களையும் இயற்றியுள்ளது. அதுபோன்ற அழியும் தருவாயில் உள்ள 'லகடு வல்லூறு (லகார் ஃபால்கன்-laggar falcon)' என்ற கழுகினம் இங்குள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்தபடியாக அரிட்டாபட்டியில் மட்டுமே காணப்படுவதாக பறவையியலாளர்கள் கூறுகின்றனர்.

இயற்கையைக் காத்த கிராமத்தினருக்கு கிடைத்த வெகுமதி:இவையனைத்துமே முறைப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. துறை சார்ந்த அரசு அலுவலர்களும், இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அவர்களே நேரடியாக இங்கு வந்து ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். அதேபோன்று, அண்மையில் பிஹெச்எஸ் அமைப்பின் செயலாளரும் ஆய்வு செய்தார். இதனையடுத்தே, தமிழ்நாடு அரசு அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் அரிட்டாபட்டி மக்கள் சார்பாக எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

அரிட்டாபட்டியை வாழ்விடமாகக் கொண்ட அரிய பறவையினங்கள்..

அரிய பறவையினங்களின் வாழ்விடம்:இங்குள்ள பறவையினங்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பறவையியலாளரும், கானுயிர் புகைப்படக் கலைஞருமான ரவீந்திரன் தொலைபேசி வழியாக நம்மிடம் கூறுகையில், 'இங்கு 161 வகை பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 45 வகை வண்ணத்துப்பூச்சிகள், புள்ளிமான்கள், கடமான்கள், நரி, காட்டுப்பன்றிகள், உடும்பு ஆகியவற்றோடு பலவகையான பாம்பினங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் எண்ணற்ற வண்டு இனங்களும், இருவாழ்விகளும் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோன்று அரியவகை லகுடு வல்லூறு, இந்திய பொறி வல்லூறு, சிற்றெழால், ராஜாளி, பெரும்புள்ளி கழுகு, கருங்கழுகு, கொம்பன் ஆந்தை, பூமன் ஆந்தை போன்ற பறவைகளும் குறிப்பிடத்தகுந்தவை. நீல பூங்குருவி, சுருகு திருப்பி, படைக்குருவி போன்ற வலசை பறவைகளும் இங்கே வாழ்கின்றன' என்கிறார்.

மேலும் அவ்வூரைச் சேர்ந்த கருப்பணன் கூறுகையில், ’மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு தனியார் கிரானைட் நிறுவனங்களிடமிருந்து இந்த மலையைக் காப்பாற்றுவதற்காக, ஆறு மாத கைக்குழந்தை மட்டுமன்றி 80 வயது முதியவர்களும்கூட போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தமிழ்நாடு அரசின் அறிவிப்பால் எங்களது மலை முழுவதுமாக மீட்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்த சின்மயா சோமசுந்தரம் உள்ளிட்ட ஊர் பெரியவர்களை நாங்கள் இந்நேரத்தில் நினைவு கூர்கிறோம்' என்றார்.

'நறுங்கடம்பு' என்ற நூலின் ஆசிரியரும் தாவரவியல் ஆய்வாளருமான கார்த்திகேயன் பார்கவிதை அவர்களிடம் தொலைபேசி வழியாக கேட்டறிந்ததில் அவர், 'அரிட்டாபட்டியில் சில அரிய வகை தாவரங்களும் உள்ளன. குறிப்பாக சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்படும் 'எட்டி (காஞ்சிரம்)' என்ற மரம் இங்குள்ளது. விஷப்பூச்சிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றக்கூடிய மருத்துவக் குணம் நிறைந்த மரமாகும்.

பசுமை மாறாத சூழலில் மூலிகைகள்:இது மிக அருகி வரும் தாவர இனங்களில் ஒன்று. மிகமிக நஞ்சு உடையதாகும். அதேபோன்று உசிலை, வெள்வேலம், தணக்கு, வரதநாராயணன், விடத்தலை, கல்அத்தி, வெருவெட்டான், வக்கணை போன்ற அரிதான மரங்களும் இங்குள்ளன. மேலும் பெருங்கட்டுக்கொடி, நீர் முள்ளி, விராலி, ஆவாரை, கண்டங்கத்திரி, விஷ்ணுகிராந்தி, சேத்துராசா, வெண் பூலா, இம்பூரல், மூக்கிரட்டை, துத்தி, கள்ளிமுளையான், பற்படாகம், எலுமிச்சம்புல் போன்ற மருத்துவ குணம் மிக்க மூலிகை வகைகளும் அரிட்டாபட்டியில் காணப்படுகின்றன' என்கிறார்.

மற்றுமொரு கோரிக்கை:மேலும் அவர் கூறுகையில், 'பிஹெச்எஸ் செயலர் நேரடியாகப் பார்வையிட வந்தபோது நானும் உடன் சென்றேன். அரிட்டாபட்டிக்குப் பிறகு திருவாதவூர் அருகே உள்ள இடையபட்டியையும் அவர் பார்வையிட்டார். மேய்ச்சல் நிலமாகவும், பல்லுயிர்ச்சூழல் மிகுந்த மதுரையின் மற்றொரு முக்கிய பல்லுயிர்ப் பாரம்பரிய இடம் இதுவாகும். ஆகையால், இடையபட்டியையும் பல்லுயிர் பாரம்பரிய இடமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்' என அவர் வேண்டுகோள் வைத்தார்.

பாரம்பரியப் பெருமை மிக்க அரிட்டாபட்டி மலையையும் அதன் சுற்றுச்சூழலையும் காக்க பல்வேறு போராட்டங்களை நடத்திய பொதுமக்கள், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்கின்றனர்.

அழியா பல்லுயிரிய பாரம்பரியம் கொண்ட 'அரிட்டாபட்டி' கிராமம் குறித்த சிறப்பு தொகுப்பு

(புகைப்படங்களுக்கு நன்றி - ரவீந்திரன்)

இதையும் படிங்க: பல்லுயிர் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி: சிறப்புகள் என்ன?

Last Updated : Nov 24, 2022, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details