மதுரையில் உள்ள நீதிக்கான சாட்சியம் என்ற அமைப்பின் சார்பாக அரக்கோணம் இரட்டை படுகொலைத் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அமைப்பின் செயல் இயக்குநர் பாண்டியன் மதுரையில் இன்று (ஏப். 17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரக்கோணம் சோகனூர் பகுதியில் நடைபெற்ற பட்டியலின சாதி இளைஞர்கள் படுகொலை, தேர்தலில் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்ததற்கான வன்கொடுமைச் சம்பவமாகும்.
இந்தக் கொலையில் பாமகவின் பங்கு நேரடியாகவே உள்ளது. ஆனாலும், சிவகாமி ஐஏஎஸ் இது குறித்து முரண்பட்ட தகவலை கூறியிருப்பது ஆச்சரியத்திற்குரியது. பட்டியலின சாதியைச் சார்ந்த அர்ஜுன், சூர்யா படுகொலை திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சாதிய படுகொலை மட்டுமன்றி தேர்தல் முன்விரோதமுமாகும். இந்த வழக்கில், தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 2015 விதிகள் 12 இன் கீழ் சாதி மண் படுகொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் ஒரு கோடி நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். மேலும் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சௌந்தரராஜன், மதன்குமார், வல்லரசு ஆகியோருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.