மதுரை: ஒத்தக்கடை அருகே உள்ள கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உக்கிர பாண்டியன் மனைவி ஆயி என்ற பூரணம், தனக்கு சொந்தமான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை கல்விப் பணிக்காக தானம் வழங்கிய பூரணம், அதனை விளம்பரப்படுத்த மறுத்துவிட்டார். இந்த நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை (ஜன.12) கல்வி பணிக்காக தானம் வழங்கிய பூரணமை கவுரவபடுத்தும் வகையில் கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கொடிக்குளம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சம்பூர்ணம் கூறுகையில், "ஆயி என்ற பூரணம் எங்களது பள்ளியின் முன்னாள் மாணவி ஆவார். தனது பெண் ஜனனியின் பெயரால் நடுநிலைப் பள்ளியாக இருக்கும் கொடிக்குளம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தன்னுடைய 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்குகியுள்ளார்.
கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு ஜனனி கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் காலமானார். திருமணம் ஆகி இருந்தாலும் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். ஜனனி சிறுபிள்ளையாக இருக்கும் போது இறந்துவிட்டார். அப்போதிருந்து தனது மகளை பூரணம், வேறு திருமணம் செய்து கொள்ளாமல் வளர்த்து வந்தார்.