மதுரை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையினால், பெரும்பாலான பகுதிகளில் சாலையில் நீர்த்தேக்கம், குடியிருப்பு பகுதிகள் சேதம், விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், ஓடை உடைப்பு காரணமாக மாநகர பகுதிகள் முழுவதும் மழை நீரானது வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த தொடர் மழையின் காரணமாக, குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்துள்ள காரணத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் மக்களின் பாதுகாப்பிற்காக தொடர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் சில பகுதிகளில் உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே இந்த இக்கட்டான நிலையில் இருந்து பொதுமக்களைக் காக்க, அரசு விரைந்து செயல்பட, நீதிமன்றம் தாமாக முன்வந்து இதனை வழக்காக விசாரிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்துள்ளார்.
இந்த முறையீடு, நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வு முன் இன்று (டிச.18) முறையீடு செய்யப்பட்டது. அப்போது, “கனமழை மற்றும் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்து, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க முடியாது. மனுதாரர் விரும்பினால் வழக்காக பதிவு செய்யலாம். வழக்கை நீதிமன்றம் விசாரணை செய்யும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:South TN Rain Live Update:எந்தெந்த பகுதிக்கு 'ரெட் அலர்ட்'..தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை..நிலவரம் என்ன?