தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக கரோனா வைரஸ் சென்னையை போல் வேகமாக பரவியது. தினம்தோறும் சராசரியாக 400 முதல் 500 புதிய கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இதையடுத்து, மதுரையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன.
கரோனாவுக்கு எதிரான மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் மதுரையில் கட்டுப்பாடு இல்லாமல் பரவிய கரோனா தொற்று தற்போது குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் தேதி முதல் கரோனா பரவல் விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 21) மேலும் 86 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 237ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில், அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 331ஆக அதிகரித்துள்ளது.