தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அஞ்சாத சிங்கம் என் காளை' - களம் காண தயாராகும் 12ஆம் வகுப்பு மாணவியின் ஜல்லிக்கட்டு காளை! - பெண் சாதனையாளர்

ஜல்லிக்கட்டுத் திருவிழா இன்னும் சில வாரங்களில் களைகட்ட உள்ள நிலையில், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி யோகதர்ஷினி வளர்க்கும் காளையும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் களம் காண உள்ளது. அதுகுறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

'அஞ்சாத சிங்கம் என் காளை' - களம் காண தயாராகும் 12ஆம் வகுப்பு மாணவியின் ஜல்லிக்கட்டு காளை!!
'அஞ்சாத சிங்கம் என் காளை' - களம் காண தயாராகும் 12ஆம் வகுப்பு மாணவியின் ஜல்லிக்கட்டு காளை!!

By

Published : Dec 21, 2022, 11:15 PM IST

'அஞ்சாத சிங்கம் என் காளை' - களம் காண தயாராகும் 12ஆம் வகுப்பு மாணவியின் ஜல்லிக்கட்டு காளை!!

மதுரையின் புறநகர்ப்பகுதியான ஐராவதநல்லூரில் தனது அண்ணன் மற்றும் பெற்றோர் அளிக்கும் ஊக்கத்தில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வரும் மாணவி யோகதர்ஷினி, மீனாட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயில்கிறார். பாரம்பரியமான விவசாயக் குடும்பம் என்பதால், மாடுகள் வளர்ப்பு என்பது இவரது குடும்பத்தின் வாழ்வியல் தொழிலாகும்.

அண்ணன் அர்ஜூன் வழிகாட்டுதலில் தங்கள் வீட்டில் வளரும் காளைகளுக்கு உணவு அளிப்பது, தண்ணீர் வைப்பது என குழந்தைப் பருவத்திலேயே காளை வளர்ப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதாகக் கூறுகிறார், யோகதர்ஷினி.

‘கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தான் எனக்குள் காளைகள் மீதும், நமது பாரம்பரியத்தின் மீதும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. தற்போது மூன்று காளைகள் ஜல்லிக்கட்டுத் திருவிழாவிற்கு தயாராக உள்ளன.

எனது தாத்தா காலத்திலிருந்து நாங்கள் மாடுகள் வளர்த்து வருகிறோம். சொந்தமாக இடம் இருக்கின்ற காரணத்தால் எங்களால் காளைகளை நன்றாக வளர்க்க முடிகிறது’ என்றார். ’நாள்தோறும் காலையும், மாலையும் மாடுகளுக்குத் தேவையான உணவினை வழங்குவதில் மனதுக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. மேலும் அந்தக் காளைகளோடு நண்பனாக பேசி மகிழ்வதும் தனக்கு நிறைவளிக்கும் ஒன்று’ என சொல்லும் யோகதர்ஷினி, ’மதுரையில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டுகளிலும் எங்களது காளைகள் பங்கேற்கும்.

அந்தப் போட்டிகளில் பங்கேற்க நானும் உடன் செல்வேன். நிறையப் பரிசுகள் பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு எங்களது காளை முதல்முறையாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடிமாடாக ஆனது. அப்போது அமைச்சர் மூர்த்தி, காளை உரிமையாளர்களுக்கான பரிசினைத் தர முன் வந்த போது நான் அதை வாங்க மறுத்துவிட்டேன்’ என்றார். அந்த வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறுகையில், ’ஒரு பெண்ணாக காளை மாடுகளை அழைத்துச் சென்று ஜல்லிக்கட்டில் பங்கேற்பதை எனது உறவினர்கள் முதலில் விரும்பவில்லை. ஆனால், தற்போது என்னைப் பற்றி வெளியாகும் செய்திகளைக் கண்டு எங்களது சொந்தக்காரப் பெண்தான் என்று பெருமை பேசுகிறார்கள். என்னோடு பயிலும் சக மாணவியர்கள், எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பர்.

கடந்த ஆண்டு கூட பெண் சாதனையாளர் என்ற பெயரில் எனக்கு தனியார் அமைப்பு ஒன்று விருது வழங்கியது. அச்சமயம் எனக்குத் தேர்வு இருந்ததால் தயக்கம் காட்டினேன். ஆனாலும், எனது தோழிகள்தான் ஊக்கம் தந்து என்னை விருது வாங்க வைத்தனர். அதேபோன்று எனது பள்ளி ஆசிரியர்களும் எனது முயற்சிக்கு உறுதுணையாக உள்ளனர்.

தன்னைப் போன்று காளை வளர்ப்பில் ஆர்வம் காட்டும் பெண்களுக்கு பெற்றோரும் உறவினர்களும் ஆதரவு தர வேண்டும். அதேபோன்று ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தை அறியாதவர்களுக்கும் கூட தலைமுறை தலைமுறையாக கொண்டு சேர்க்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும்’ என்றார் யோகதர்ஷினி.

யோகதர்ஷினியின் சகோதரர் அர்ஜூன் கூறுகையில், ’எங்களது தாத்தா காலத்திலிருந்தே மாடுகளை வளர்த்து வருகிறோம். எங்களது தந்தையார் 9 வயதில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்தார். தற்போது அவர்களின் வழியில் நானும் தங்கை யோகதர்ஷினியும் களமிறங்குகிறோம்.

சிறு வயதில் யோகா, காளை அவிழ்க்க ஆர்வம் காட்டியதால் ஒருமுறை அனுமதித்தோம். அதற்குப் பிறகு தொடர்ந்து அவரே ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அவிழ்க்கத் தொடங்கினார். நாங்கள் வளர்க்கின்ற காளைகளை பராமரிப்பதில் யோகா அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அதே நேரம் படிப்பிலும் அக்கறை காட்டுகிறார்’ என்றார்.

தான் கற்றுக் கொள்ளும் கல்வியோடு காளை வளர்ப்பிலும், அதனை ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் சென்றும் வீரத் தமிழச்சியாய் மிளிரும் யோகதர்ஷினி, தைப்பொங்கலில் தொடங்கும் ஜல்லிக்கட்டு கோலாகலத்திற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

அதற்காக தனது காளைகளுக்கு, தனது அண்ணன் அர்ஜூனோடு இணைந்து பயிற்சி அளித்தும் வருகிறார். தன்னுடைய காளை, மாடுபிடி வீரர்களோடு மல்லுக்கட்டப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறார், வீரத்தமிழச்சி யோகதர்ஷினி.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் மார்ச் வரை நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details