தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் அதிகாரிகளால் மன அழுத்தம்.. மதுரையில் அங்கன்வாடி பணியாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!

Madurai Anganwadi Worker Suicide: மதுரையில் உயர் அதிகாரிகளின் பணி அழுத்தம் காரணமாக அங்கன்வாடி பணியாளர் தற்கொலை கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் அதிகாரிகளின் மன அழுத்தம் காரணமாக அங்கன்வாடி பணியாளர் தற்கொலை
உயர் அதிகாரிகளின் மன அழுத்தம் காரணமாக அங்கன்வாடி பணியாளர் தற்கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 10:58 PM IST

மதுரை: சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அம்சவள்ளி (42). இவரது கணவர் பாலமுருகன் கடந்த 2013ஆம் ஆண்டு காலமான நிலையில், மகன் சூரியநாராயணனுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவரை இழந்த அம்சவள்ளிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அங்கன்வாடி மைய பணியாளருக்கான ஆணை கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, அம்சவள்ளி சிம்மக்கல் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அம்சவள்ளிக்கும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், பணியில் இருந்து விலகுவதாக அம்சவள்ளி ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். இதனையடுத்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதனிடையே அம்சவள்ளி பயன்படுத்திய லேப்டாப் உள்ளிட்டவற்றை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், அம்சவள்ளி தனது வீட்டில் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, விளக்குத்தூண் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, தற்கொலை செய்துகொண்ட அம்சவள்ளி தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிவைத்த கடிதத்தினை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த தற்கொலை கடிதத்தில், “என் மன உளைச்சலுக்கு, நான் வேலை பார்க்கும் இடத்தில் தான் எடுத்த முடிவுக்கு CDPO (குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்), பிசி காரணம். என் தற்கொலைக்கு அவர்கள் மட்டும் தான் காரணம்” என எழுதியிருந்தார்.

உயர் அதிகாரிகளின் மன அழுத்தம் காரணமாக அங்கன்வாடி பணியாளர் தற்கொலை

அதன் தொடர்ச்சியாக அடுத்த பக்கத்தில் “சூர்யா மன்னிச்சிடு” என்றும் எழுதியுள்ளார். இந்நிலையில் தனது தாயாரின் தற்கொலைக்கு காரணமான குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய மகன் சூரிய நாரயணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே, அங்கன்வாடி மைய பணியாளரின் தற்கொலைக்கு காரணமான குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் பிசி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்கொலை செய்துகொண்ட அம்சவள்ளியின் மகனுக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் கூறி, அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவறை முன்பாக அமர்ந்து அங்கன்வாடி மைய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அம்சவள்ளியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த உடலை எடுத்துசென்றபோது, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுக்க கூடாது என கூறி வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் உடலை எடுப்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, காவல்துறையினர் உடலை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.

அம்சவள்ளியின் தற்கொலை குறித்து அங்கன்வாடி மைய பணியாளர்கள் கூறுகையில், “அங்கன்வாடிகளில் தேவையான சிலிண்டர்களுக்கான பணம், கட்டிட வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட எந்த வித வசதிகளையும் செய்து கொடுக்காமல், அங்கன்வாடி ஆவண பதிவேற்றம் தொடர்பான பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ள அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர்.

10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அங்கன்வாடி பணியாளர்கள் அங்கன்வாடி வாடகை, சிலிண்டர் காசு, மின் கட்டணம் ஆகியவற்றை ஊதியத்தில் இருந்து செலுத்தும் நிலை உள்ளது. உயரதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறி அழுத்தம் கொடுப்பதோடு குழந்தைகள் முன்பாகவும், பொது இடத்தில் வைத்தும் அவதூறாக பேசுவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இதனால் தான் இது போன்ற தற்கொலை நடந்துள்ளது” என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களுக்கு பணி அழுத்தம் அதிகரித்துவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில், மதுரையில் அங்கன்வாடி பணியாளர்கள் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி விவகாரத்தில் அடிப்படை புரிதல் இல்லை" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details