மதுரை:தென் மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜன.04) நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக அதிமுக பற்றி தானே கேட்க போகிறீர்கள்? முதலில் நான் சொல்வதை கேளுங்கள், பின்பு உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்றார்.
அப்போது பேசிய அவர், ”புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் நடைபெற்ற தீண்டாமை வன்கொடுமை செயல் மிக தவறானதாகும். அடித்தட்டு மக்கள் முன்னுக்கு வர வேண்டும்.
ஒரு காலத்தில் அடித்தட்டு மக்கள் ஒடுக்கப்பட்ட சூழல் இன்று மாறியுள்ளது. ஆனால், போதுமான வேகம் இல்லை. தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தாலும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈஷா மையத்திற்கு மத்திய அரசு ஏன் இவ்வளவு சலுகைகள் கொடுக்கிறார்கள்? காடுகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எதற்காக விதிவிலக்கு? சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான். அங்கு நடைபெற்ற இளம்பெண் தற்கொலை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அந்த மையத்தி சார்ந்தவர்கள் காவிரியை பாதுகாப்பதாகவும் மரம் நடுவதாகவும் அவர்கள் வசூலித்த பணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.