மதுரை:சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், “எனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததற்கான உரிய தொகையை அரசு ஊழியருக்கான இன்சூரன்ஸ் தொகையிலிருந்து எனக்கு வழங்கும்படி விண்ணப்பித்தேன். ஆனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, உரிய மருத்துவத் தொகையை எங்களுக்கு 6 சதவீதம் வட்டியுடன் அளிக்கும்படி 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனாலும், அந்த உத்தரவு இது வரையிலும் முறையாக நிறைவேற்றப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடந்த 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராகினர். பின்னர் அரசு வழக்கறிஞர் ஆஜராகி மனுதாரர் தரப்பினருக்கு நீதிமன்ற உத்தரவின்படி உரிய தொகை வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதி, ‘2019ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தற்போது மனுதாரருக்கு எவ்வளவு தொகை வட்டியாக செலுத்தப்பட்டு உள்ளது?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் 6 சதவீதம் வட்டியாக செலுத்தப்பட்டு உள்ளது என்றார்.