மதுரை:காங்கிரஸ் எதிர் கம்யூனிஸ்ட்-ஆக இருந்த தமிழக அரசியல் வரலாறு என்பது திராவிடர் கழகத்திலிருந்து பெரியாருடன் முரண்பட்டு அண்ணா பிரிந்த பின்னர் காங்கிரஸ் எதிர் திமுக-வாக மாற்றமடைந்தது. திமுக-வின் தவிர்க்கவியலாத மக்கள் சக்தியாகத் திகழ்ந்த எம்ஜிஆர், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதியை எதிர்த்து தனிக் கட்சி ஒன்றை உருவாக்கி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயரிட்டு, கருணாநிதி தலைமையிலான திமுக-வுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தார்.
சற்றேறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக எம்ஜிஆர் காலமாகும்வரை தமிழக அரசியலில் அதிமுக-வின் ஆதிக்கமே முழுவதுமாக மேலோங்கியிருந்தது. வீழ்ந்த திமுக-வை மேலே எழவிடாமல் எம்ஜிஆர் தனது அதிகாரத்தை தமிழக அரசியலில் மிகத் திறமையோடு கைப்பற்றியிருந்தார். கடந்த 1987-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் எம்ஜிஆர் மரணமடைந்த பின்னர், அப்போது எழுந்த உட்கட்சி பூசலில் அதிமுக ஜானகி - ஜெயலலிதா என இரண்டு அணிகளாகப் பிரிந்தது.
இந்த பிளவைப் பயன்படுத்திக் கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, அப்போது நடைபெற்ற தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெற்று, 1989-ஆம் ஆண்டு தனது அரசியல் வனவாசத்தை நிறைவு செய்து முதல்வராக தமிழக ஆட்சிக் கட்டிலில் ஏறினார். அதற்குப் பிறகு ஜெயலலிதா தலைமையில் ஒன்றுபட்ட அதிமுக, மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. 1991-ஆம் ஆண்டு அதிமுக அரியணையில் ஏறியது. பிறகு திமுக, அதிமுக என தமிழக அரசியல் மாறி மாறி களம் காணத் தொடங்கியது.
திமுக அவ்வப்போது அரியணை ஏற முயன்றாலும்கூட, அதிமுக-வின் வாக்கு விழுக்காடு என்பது மிக மிக அசாத்தியமானது. ஆகையால் திமுக-வுக்கும் அதன் தலைமைக்கும் அதிமுக-வின் இருப்பு என்பது மிகப் பெரிய தலைவலியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜெயலலிதாவின் இறப்பு, தமிழக அரசியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அப்போது சசிகலா, ஓபிஎஸ் என இரண்டாகப் பிரிந்து நின்றாலும், சசிகலா மீதான வழக்கு, அவரது ஆதரவாளரான ஈபிஎஸ் முதல்வராவதற்கு சாதகமாக அமைந்தது.
எப்படியோ தட்டுத்தடுமாறி ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட ஈபிஎஸ், கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மிகக் கடுமையாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட போதும்கூட திமுக-விடம் கௌரவமான தோல்வியைத் தழுவினார். அதிமுக-வின் அசுரபலத்தை எப்படியேனும் தவிடுபொடியாக்குவதை நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு அதிமுக-வை ஈபிஎஸ்-ஓபிஎஸ் என இரண்டு அணிகளாக மாற்றும் சாணக்கியத்தனத்தை திரைமறைவில் திமுக செயல்படுத்தியது.
திமுக-வின் செயல்பாடுகளை அவ்வப்போது பாராட்டியதால் அதிமுகவினரே ஓ.பன்னீர்செல்வத்தை திமுக-வின் கையாள் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டத் தொடங்கினர். இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து, அதிமுக அலுவலகத்தைக் கைப்பற்றும் போட்டாபோட்டியில் வந்து நின்றது. மாறி, மாறி பொதுக்குழுவைக் கூட்டி ஒருவரையருவர் அவர்களாகவே நீக்கிக் கொண்டனர். கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஈபிஎஸ்-க்கு ஆதரவாகத் திரண்ட நிலையில், ஓபிஎஸ், தன் பக்கமுள்ள ஓரிருவரைத் தவிர கையறுநிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கு வருகின்ற ஜனவரி 4-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதனை ஒருங்கிணைக்கும் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதுபோன்று எடப்பாடி பழனிசாமிக்கும் அனுப்பிய கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டுள்ளது.
இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்தக் கடிதம் ஈபிஎஸ் தரப்புக்கு முக்கிய ஆதாரமாக அமையும்பட்சத்தில் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வழக்கில் எடப்பாடிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என ஓபிஎஸ் தரப்பு கருதுகிறது. தங்களுடைய சட்டப்போராட்டம் பல்வேறு வகையிலும் தங்களுக்கு சாதகமாக அமையாத நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் பெரும் மன உளைச்சலில் உள்ளனர். தாங்கள் பெரிதும் நம்பிய பாஜகவும் தங்களை கைவிட்டுவிட்டதாகவே நம்புகின்றனர்.
ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் நவமணி இதற்கிடையே வருகின்ற 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்வரை அதிமுக-வின் இந்தப் பிளவு தொடர்ந்து இருக்குமானால், தங்களது வெற்றி மேலும் எளிதாகும் என திமுக தரப்பு நம்புகிறது. ஆகையால், வருகின்ற 2023-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, தமிழக அரசியலில் அதிமுக என்ற கட்சிக்கு மிகப் பெரும் குடைச்சலாகவே அமையப்போகிறது. ஜனவரி 4-ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்பைப் பொறுத்து ஓபிஎஸ்-ன் அரசியல் வரலாறும்கூட திருத்தி எழுதப்படவும் வாய்ப்புண்டு. இந்நிலையில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் அரசியல் நகர்வும்கூட அதிகமாக கவனத்திற்கு உள்ளாகலாம்.
இதுகுறித்து, ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் அரசியல் விமர்சகருமான நவமணி கூறுகையில், “வேறு எந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லாத வாக்குவங்கி அதிமுகவுக்கு இப்போதும் உண்டு. எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம், இன்றைக்கு அதன் தலைவர்களால் வலிமை குன்றும் நிலைக்குச் சென்றுள்ளது. அதிமுகவின் இடத்தை நிரப்புவதற்கு பாஜக மிக வேகமாக தன்னை வளர்த்துக் கொள்ள முயல்கிறது. இதனை அதிமுக உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா என்ற பிளவு அதிமுகவை படுகுழிக்கே தள்ளும். இதனை தமிழக மக்களும், அதிமுகவின் தொண்டர்களும் விரும்பவில்லை. ஆகையால் தங்களுக்குள் இருக்கும் தன்முனைப்பைக் கைவிட்டு இந்த நான்கு பேரும் ஒன்றிணைய வேண்டும். அதனை செய்யத் தவறினால், வரலாற்றுப் பழிக்கு இவர்கள் ஆளாவார்கள்” என்கிறார்.
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவின் இடம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். தலைவர்களை விட, தொண்டர்களே அந்தக் கட்சியின் அசைக்க முடியாத மிகப் பெரும் சொத்து. அவர்களை சோர்வடையச் செய்யும் இந்தப் பிளவுகளை ஈபிஎஸ், ஓபிஎஸ் கவனத்திற் கொள்வது அவசியம். மீண்டும் இரட்டைப்புறா-சேவல் காலமா..? அல்லது அசைக்க முடியாத இரட்டை இலையின் சகாப்தமா..? என்பதற்கான காலத்தின் விடை இந்த இருவரின் கையில்தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதையும் படிங்க:'இந்திய சட்ட ஆணையம் ஈபிஎஸ்-யை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது தவறானது'