மலக்குழி மரணத்தில் சமூகநீதி மாநிலம் முதலிடம் வகிப்பது வேதனை மதுரை: தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் முதலிடத்திலும் உள்ளது. சமூக நீதி பேசும் மாநிலங்களில் முதலிடததில் இருக்கும் தமிழ்நாடு மலக்குழி மரணத்திலும் முதலிடம் வகிப்பது வேதனையளிக்கிறது என தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கூறியுள்ளார். மற்ற நாடுகளில் மலங்களை அகற்ற பல்வேரு கருவிகள் உபயோகித்து முன்னேறி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் மனிதர்களை உபயோகிக்கும் அவலம் நடந்துகொண்டுதான் உள்ளது என்றார்.
மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டமானது தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கடசேன், “தென்மாவட்டங்களில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தூய்மைப் பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த ஆய்வு கூட்டங்களின் போது தூய்மைப் பணியாளர்கள் ஊதிய பிரச்னையை முக்கியமாக கூறுகின்றனர். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கான PF, ESI முறையாக வழங்கப்படுவதில்லை, தூய்மைப் பணியாளர்களுக்கான காப்பீடு முறையாக இல்லாததால் அது குறித்து வலியுறுத்தியுள்ளோம்” என கூறியாள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த பணி முறையால் நாடு முழுவதிலும் ஊழல் நடக்கிறது எனவே தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், பணி நிரந்தரம் அல்லது நேரடி ஊதிய வழங்கல் (DPS-DIRECT PAYMENT SYSTEM) முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கூறிய அவர், தூய்மைப் பணியாளர்களுக்கான கழகம் (கார்ப்பரேசன்) உருவாக்கபட வேண்டும் எனவும், தேசிய அளவில் இருப்பது போல தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவில் ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும், “தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கான வாரியத்திற்கு அதிகாரம் இல்லை. மேலும் இந்தியாவில் 11 மாநிலங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கான மாநில ஆணையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் SC கமிசன் உள்ளது, ஆனால் தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் இல்லை. தூய்மைப் பணியாளர்களை தற்காலிக பணியாளராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களில் 99 விழுக்காடு பேர் பட்டியலினத்தவர்களாக உள்ள நிலையில், தற்காலிக பணியாளர் முறையால் பட்டியலின மக்களிடம் இருந்து நிரந்தர பணிகளை பறிக்கின்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கான கரோனா கால நிதியுதவி சில மாவட்டங்களில் இன்னும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் நடத்திய ஆய்வு குறித்தும், தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைப்பது குறித்தும், முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வழங்கவுள்ளோம்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதிலும் அவுட்சோர்சிங்கால் பிரச்னை அதிகமாக உள்ளது. தூய்மைப் பணிகளில் லாபம் அதிகமாக உள்ளதனால் ஒப்பந்த நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர். அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என கூறியுள்ளோம். மலக்குழி மரணங்கள் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது, சமூக நீதி பேசும் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ள நாம் மலக்குழி மரணங்களிளும் முதலிடத்தில் இருப்பது என்பது கவலை அளிக்கிறது” என கூறியுள்ளார்.
மலக்குழிகளில் இறங்க கூடாது என தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். “தூய்மைப் பணியாளர்களுக்கான புகார் குறித்து 14420 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். மலக்குழிகளின் பக்கவாட்டில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய ஐஐடி குழு போன்ற நிறுவனங்கள் மூலமாக புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்க வேண்டும், ஒப்பந்த முறை இருக்கும் வரை தூய்மை பணியாளர்கள் வறுமைக்காக மலக்குழிகளில் இறங்கி தூய்மை பணிகளில் ஈடும் நிலை இருக்கும்”, என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 50வது ஆண்டை நிறைவு செய்யும் அண்ணா மேம்பாலம் - புதுப்பொலிவுடன் திறப்பது எப்போது?