மதுரை: இயற்கை வாழ்வியல், தற்சார்பு வேளாண்மை என படித்த இளைஞர்களின் கவனம் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பொறியியல் படித்துவிட்டு தனது பாரம்பரியத் தொழிலான நெசவுத்தொழிலை கசடறக் கற்று, தனக்கான வாழ்வியல் இதுதான் எனத் தீர்மானம் செய்துவிட்டு சேவை மனப்பாங்கோடு களம் இறங்கியுள்ளார் இளைஞர் சரவணன்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே 'பொதிகை சோலை' என்னும் கூட்டுறவு அமைப்பில் இணைந்து நெசவுத்தொழிலை செய்து வருகிறார். பல்வேறு தரப்பட்ட இளைஞர்களுக்கும் இத்தொழிலைக் கற்றுத் தருகிறார். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சொந்த ஊராக கொண்ட சரவணன், பள்ளிப்படிப்பை முடித்த கையோடு காஞ்சிபுரத்தில் மின்னணு தகவல் தொடர்பில் பொறியியல் படிப்பை நிறைவு செய்துள்ளார்.
கிடைத்த வாய்ப்பு: பல்வேறு ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றினாலும் அவருக்கு எதுவுமே மனநிறைவைத் தராத நிலையில், தனது குடும்பத்தின் பாரம்பரிய தொழிலான நெசவைக் கற்றுக் கொள்ள தீர்மானித்து, கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவிலுள்ள மேல்கோட்டை கிராமத்தில் அமைந்திருக்கும் ஜனபதாகாதி என்ற அமைப்பில் இணைந்து நெசவைக் கற்றுத் திரும்பியுள்ளார்.
சரவணன் கூறுகையில், “பொதிகை சோலை அமைப்பின் நிறுவனர் பாமயன் வாய்ப்பளித்ததால், தற்போது இங்கேயே தறி போட்டு, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியிலிருந்து துணிகளை நெய்து தருகிறேன். மேலும் ஆர்வத்துடன் வருகின்ற இளைஞர்களுக்கு நெசவுத்தொழிலைக் கற்றுத் தருகிறேன். தற்போது என்னிடம் கேரள மாநில இளைஞர்கள் கற்றுக் கொள்கின்றனர்” என்கிறார்.
இயற்கை விவசாயம்:பொதிகை சோலை அமைப்பின் சார்பாக 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணைய முறையில் இங்கே இயற்கை விவசாயத்தை மேற்கொள்கின்றனர். ஆகையால் இங்கு விளைவிக்கப்படும் பருத்தியை திரித்து, நூலாக்கி, அந்நூலை நூலாடையாக்கி, இங்கேயே விற்பனைக்கும் வைத்துள்ளனர். வெளி இடங்களுக்கு தேவையைப் பொறுத்து ஆடை, துண்டு, பை, கைக்குட்டைகள் தயாரித்து வழங்கி வருகின்றனர்.