மதுரை மாநகரின் சட்டக் கல்லூரிக்கு எதிர்புறம் இருக்கும் நடைபாதையில் உள்ள ஒரு நடுகல் சிற்பத்தொகுதி மடை கருப்பசாமி என்ற பெயரில் மக்களால்வழிபடப்படுகிறது. இதனை மதுரை தொல்லியல் ஆய்வு சங்கத்தை சேர்ந்த தேவி, தொல்லியல் ஆய்வாளர் கோ.சசிகலா, வரலாற்றாய்வாளர் அறிவுசெல்வம் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
சாமியான சதிக்கல்!
இரண்டரை அடி உயரம், ஒன்றரை அடி நீளம், குறுக்களவு முக்கால் அடி உள்ள பலகைக் கல்லில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் நின்ற நிலையில் இச்சிற்பத் தொகுதியில் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தில் ஆண் உருவம் ஒரு அரசனைப் போன்று காட்சியளிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதில் கணுக்கால் வரை நீண்டுள்ள மடிப்புகளுடன் கூடிய ஆடை உடுத்தியவாறு, நேர்முகமாய் கம்பீரத்துடன் கால்களை சற்று அகட்டியவாறு நின்றுள்ளார். இடைக்கட்டுடன் கூடிய இடையாடையின் மையப்பகுதியில் குறுவாள் ஒன்று செருகப்பட்டுள்ளது.
இடது கையை கடி முத்திரையாக இடையில் வைத்தவாறும், வலது கையில் மலர் ஒன்றை பிடித்தபடியும் சாந்த திருக்கோலம் கொண்டுள்ள அய்யனின் முகம் சிதைவுபட்டுள்ளது. ஆனாலும் பெரிய உருட்டும் நீள்விழிகளும், முறுக்கிய மீசையும் அவரை அடையாளங்காட்டுகின்றன. தலையலங்காரம் மகுடத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
நீள்செவிகளில் பத்ரகுண்டலங்கள் அணி செய்கின்றன. கழுத்தில் சரப்பளி, கைகளில் கேயூரம், தோள்வளை, கைவளை முதலிய அணிகலன்கள் தேய்மானத்தில் தெரிகின்றன. தலைவனின் வலதுபுறம் தலைவி நிற்கிறாள். முகமும், கைகளும், கால்பகுதிகளும், உடற்பகுதிகளும் முழுவதும் சிதைவுற்ற நிலையிலும் பெண்மையின் நளினத்தை இச்சிற்பத்தில் உணர முடிகிறது.
சமபாதத்தில் நேராக நிற்கும் தேவி தலைவனைப் போன்றே மடிப்புகளுடன் கூடிய கணுக்கால் வரையிலான நீண்ட ஆடை அணிந்துள்ளார். குறுகிய இடைப்பகுதியும், கால்களை குவித்து நிற்கும் நிலையும் பெண்மையின் இலக்கணமாக தோற்றமளிக்கிறது. உடலில் அணிந்துள்ள அணிகளை அடையாளங்காண கூட இயலவில்லை. காதுகளில் பத்ரகுண்டலங்கள் அழகு செய்கின்றன. தலையலங்காரமாய் வலதுபுறம் பக்கவாட்டில் கொண்டையலங்காரம் காட்டப்பட்டுள்ளது.
மதுரை சட்டக்கல்லூரி எதிரே சதிக்கல் தலைவனோடு உயிர்நீத்த சதிப்பெண்ணாய் இத்தலைவி சிற்பமாகி வழிபடப்பெறுகிறாள் எனக் கருத இடமுண்டு. இந்நடுகல் சிற்பத்தில் உள்ள வீரரும், அவர் மனையாளும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். சிற்ப அமைதியைக் கொண்டு இந்த சதிக்கல்லின் காலம் 400 வருடங்களுக்கும் பழமையானது எனலாம். காவல் தெய்வம் கருப்பசாமி என்று உள்ளுர் மக்களால் வழிபடப்பெற்றாலும், அஃது மக்கள் வழக்கேயன்றி, ஆகோள் பூசலிலோ, போரிலோ, உள்ளுர் சண்டையிலோ, ஊர் காத்தலிலோ, கொடிய விலங்குகளிடமிருந்து மக்களைக் காத்தலிலோ, நீர்நிலைகளைக் காத்தலிலோ வீரமரணமடைந்த வீரர்களே காவல்தெய்வம் கருப்பசாமிகளாக வழிப்படப்படுவது தமிழ் மரபு.
அவ்வகையில் இவ்வீரரும் சமூகத்தின் நன்மைக்காக உயிர் துறக்கையில் மனையாளும் உடன் இறந்து, இவ்வாறான சதிக்கல்லாக வழிபடப்பெறுகிறார்கள். பெண் தெய்வ வழிபாட்டில் கன்னி வழிபாடு, பத்தினி வழிபாடு, பழையோள் வழிபாடு என்ற மூன்று நிலைகளில் பத்தினி வழிபாட்டின் வகையினைச் சார்ந்ததாக சதிக்கற்கள் மக்களால் வழிபடப்படுகின்றன. அவ்வகையில் இந்நடுகல் சதிக்கல்லாய் நிற்கிறது. இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கடவுளாக வணங்கப்படும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!