மதுரை:பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 28) ராமேஸ்வரத்திலிருந்து 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை துவங்க உள்ளார். அதற்கான துவக்க விழா பொதுக்கூட்டம், இன்று மாலை 4.30 மணியளவில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. ஜூலை 29ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை முதல் கட்ட யாத்திரை நடைபெறுகிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு கட்டமாக ஐந்து கட்டம் வரை தமிழ்நாடு முழுவதும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்த பாத யாத்திரை செல்லும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சுமார் 168 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, கால்நடையாக 1,800 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளதாகவும், வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதிக்கு முன்பாக நிறைவடையும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த யாத்திரையை துவங்கி வைப்பதற்கான பொதுக்கூட்டம் இன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்திற்கு மாலை 5 மணியளவில் வந்து சேர்கிறார். மாலை 5.45 மணியளவில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.