மதுரை:தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தங்களுக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில், மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை நிராகரித்து செப்டம்பர் 17ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்துசெய்து, உள்ளாட்சித் தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வி.கே. அய்யர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை (செப். 24) அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்து பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி துரைசுவாமி ஆகியோர் அமர்வு முன்பு இன்று (செப். 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விளக்கத்தை ஆய்வுசெய்ய மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து, விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 4 மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு