மதுரை:ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை உள்ளிட்டப் பல துறைகளின் கீழ் இயங்கி வரும் பள்ளிகள் அனைத்தும், இனி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசின் இம்முயற்சி பல்வேறு தரப்பில் எதிர்ப்பினைத் தோற்றுவித்துள்ள நிலையில், இது குறித்து 'அறிவுச்சமூகம்' என்ற அமைப்பு பொது விவாதத்தை அண்மையில் நடத்தியது. அதன் தலைவரும் ஆதி திராவிடர் நல பள்ளிக் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளருமான தமிழ்முதல்வன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.
அப்போது பேசிய அவர், “நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சிக்குரியது. பொது விவாதமோ, முன்னறிவிப்போ இன்றி இதனை அறிவித்துள்ளார்கள். இதற்காக பொதுவிவாதத்தை நாங்கள் ஏற்பாடு செய்தோம். மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற இந்த பொதுவிவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில் பேசப்பட்ட கருத்துகள் அனைத்தையும் தொகுத்து அறிக்கையாக தயார் செய்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உட்பட எடப்பாடி பழனிசாமி, முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் வழங்கினோம். இந்த விவாதம் தமிழக அரசுக்குப் பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. அயோத்தி தாசப் பண்டிதர், சகஜானந்தா சுவாமிகள் ஆகியோர் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கிய ஒரு கல்வி அமைப்பே ஆதி திராவிடர் நலப்பள்ளிகள்.
பிற பள்ளி அமைப்புகளைக் காட்டிலும் ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் சமூக நோக்கோடும், கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களை முன்னேற்றும் பொருட்டும் உருவாக்கப்பட்டவையாகும். பஞ்சமர் பள்ளிகள், தொழிலாளர் நலத்துறை பள்ளிகள் என்று வரிசையாக இதன் பெயர் மாற்றப்பட்டு, கடைசியாக ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகளாக மாற்றப்பட்டு இன்று வரை இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளிகள் துவங்கப்பட்டதன் நோக்கம் இன்றுவரை நிறைவேறவில்லை. ஆதி திராவிடர் சமூகம் இன்றைக்கும் இடஒதுக்கீட்டையே பெரிதும் நம்பியுள்ளது. சாதியப்பாகுபாடு காரணமாக மிகுந்த அழுத்தத்தையும், கொடுமைகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படியான ஒரு சூழலில் அப்பள்ளிகளை இணைப்பது மிகப்பெரிய துரோகச் செயலாகும்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தும் நோக்கமாகவும் இந்த இணைப்பு உள்ளது. பலவீனமான பள்ளிகளை பலம் வாய்ந்த பள்ளிகளோடு இணைப்பது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு கூறாகும். ஆதி திராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் சில பள்ளிகள் பலவீலமானவை என்று அடையாளம் கண்டிருக்கிறோம் என்றாலும் ஒட்டுமொத்தமாக அவை இணைக்கப்படும்போது, பலவீனமான பள்ளிகள் என்ற வகையில் அருகிலுள்ளபள்ளிகள் அனைத்தும் கலைக்கப்பட்டு, பொதுப்பள்ளிகளாக மாறும்.
அப்பொதுப்பள்ளிகளும் எண்ணிக்கைக் குறைவு என்று மூடப்பட்டு நாளை தனியார் மயமாகும். இதுதான் தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கம். ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் என்று இருந்தால் அவற்றின் மீது கைவைக்க முடியாது. அச்சொல்லை நீக்கிவிட்டால் இணைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதே இதன் உள்நோக்கம். மத்திய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு எதிர்ப்பதாக நாடகமாடிக்கொண்டு, அதனையே ஏற்று மறைமுகமாகத் திணிப்பதற்கு இந்த சதி வலையை மாநில அரசு பின்னுகிறதோ என நாங்கள் சந்தேகம் கொள்கிறோம்.
ஆதி திராவிட மாணவர்களுக்கு மட்டுமன்றி, பழங்குடி மாணவர்களுக்கும் அருகிலுள்ள பள்ளிகளாக அவை இருக்கின்றன. அவர்கள் தொலைதூரம் சென்று படிக்க இயலாத வசிப்பிட சூழ்நிலை உள்ளது. அதன்பொருட்டு அந்தந்த பகுதிகளில் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இணைக்கப்பட்டால் அருகிலுள்ள பள்ளிகள் காணாமல் போகும் நிலை உருவாகும். அதுபோல, பட்டியல் சமூக மாணவர்களுக்கு அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்குகின்ற பல பள்ளிகளில் சாதியப் பாகுபாடுகளைப் பார்க்கிறோம்.
இதனால் பட்டியல் சமூக மாணவர்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். ஆனால், ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் இதுபோன்ற பாகுபாடு இருக்காது. மேலும் அதன் ஆசிரியர்கள் தனது சமூக மாணவர்களின் மேம்பாட்டிற்கு அக்கறையோடு செயல்படுவார்கள். இவையெல்லாம் நாளை மறைந்து போகும் வாய்ப்பு ஏற்படும். ஆகையால் தமிழக அரசின் இந்த முயற்சியை, மக்கள் மேல் அக்கறையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எதிர்க்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்.15-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை சென்னையில் மேற்கொண்டோம். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தங்களது எதிர்ப்பை வலுவாக பொதுவெளியில் பதிவு செய்துள்ளனர். இதற்குப் பிறகும் அரசு தனது முயற்சியை கைவிடவில்லையெனில் மேலும் பல கட்டப் போராட்டங்களை முன்னெடுக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம். நலத்துறை அனைத்தும் மேம்பட்ட தரத்துடன் இயங்குவதற்கும் முன்மாதிரிப் பள்ளிகளாகவும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட வேண்டும்.