மதுரை: தமிழ்நாடு சிறைகளில் அலுவல் சாரா பார்வையாளர்களாக உரிய பயிற்சி பெற்றவர்களை நியமிக்கக் கோரி மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, "2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் மட்டும் 33 பேர் உயிரிழந்திருப்பது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.
சிறைகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுவதாகவும், அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படுவதால் பின்னாளில் அவற்றை பரிசோதிக்கலாம் எனவும், சிறைவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க அனுமதிப்பதுடன், வாரத்திற்கு ஒரு முறையும், மாதத்திற்கு 45 நிமிடமும் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகின்றனர்.
ரூ.2.01 கோடியில் 9 மத்திய சிறைகள், 3 சிறப்பு சிறைகளில் 54 தொலைபேசிகள் உள்ளன. இது சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அலுவல் சாரா பார்வையாளரின் பதவிக்காலம் முடியும்போது, உரிய நேரத்தில் அந்த நியமனங்களை மேற்கொள்ளும் வகையில் அதற்கென குழுவை அமைக்க வேண்டும்.
ஆய்வு செய்து, ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்கிடும் வகையில், அனைத்து சிறைகளிலும் பார்வையாளர் குழுவை அமைக்க வேண்டும். அலுவல் சாரா பார்வையாளர் கூட்ட தீர்மானம், அரசுக்கான பரிந்துரைகளை மாவட்ட மற்றும் மாநில சிறை வெப்சைட்டில் வெளியிட வேண்டும்.