தமிழர் புத்தாண்டான தைப் பொங்கல் திருநாள் விழாவாக தமிழ்நாட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அத்துடன், பொங்கல் திருநாளின் மிக முக்கிய நிகழ்வான தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும்.
அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் முதலான ஜன.14ஆம் தேதி உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் அவனியாபுரத்திலும், இரண்டாம் நாளான இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தன. மூன்றாம் நாளான இன்று (ஜன.16) உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் தொடக்கமாக கால்கோல் நடும் நிகழ்ச்சி நேற்று (ஜன.15) நடைபெற்றது. அதில் பங்கேற்கவுள்ள மாடுகளை தயார்படுத்தும் இறுதிக்கட்ட பயிற்சிப் பணியில், அவற்றை வளர்ப்பவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாடிவாசலில் இருந்து ஆவேசத்துடன் சீறிப் பாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும், அவர்களைக் கலங்கடித்து ஓட வைக்க காளைகளையும் தயார்படுத்தும் பயிற்சிகள் பல்வேறு கிராமங்களில் களைகட்டிவருகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கொடியசைத்து தொடங்கிவைக்கவுள்ளதாக விழா குழு அறிவித்துள்ளது. அத்துடன், போட்டியில் வெற்றிப்பெறும் சிறந்த மாடு பிடி வீரருக்கும், காளைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தலா ஒரு மகிழுந்தை (கார்) வழங்கி மாண்புசெய்ய உள்ளனர்.