மதுரை: ஜனவரி 16ஆம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். எட்டு சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 12 காளைகளைப் பிடித்து இறுதியாக வென்ற விராட்டிபத்து கண்ணன் வெற்றி பெற்ற வீரராக அறிவிக்கப்பட்டு, அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நன்கொடையாக வழங்கிய ரூ. 6 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட இருந்தது.
ஆள்மாறாட்டம்
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பதாகவும், விராட்டிபத்து கண்ணன் குறைந்த எண்ணிக்கையிலேயே காளைகளைப் பிடித்ததாகவும், அதற்கு முன்பாக அதே பனியனை அணிந்த நபர் பிடித்த காளைகளும் கண்ணன் கணக்கில் சேர்க்கப்பட்டதாகவும்; 2ஆம் பரிசு பெற்ற அரிட்டாபட்டி கருப்பணன் உள்ளிட்ட சிலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது என்றாலும், 33ஆம் எண்ணுக்கு உரிய ஹரிகிருஷ்ணன் என்பவரது டி-சர்டை, முதல் சுற்றிலிருந்தே கண்ணன் அணிந்து கொண்டு களத்தில் இறங்கி விளையாடி, இறுதிச்சுற்று வரை 12 காளைகளைப் பிடித்த வெற்றி வீரராக நிறைவு செய்தார் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையே ஹரிகிருஷ்ணன், கண்ணன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கண்ட ஆள்மாறாட்டத்தை இருவரும் ஒத்துக்கொண்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழப்பத்திற்குத் தீர்வு இருப்பினும், பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவு விழாக்குழுவைச் சாரும் என வருவாய்க் கோட்டாட்சியரின் விசாரணையின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது எனக்கூறப்படுகிறது.
விழாக்குழு உறுப்பினர் கூறுவது என்ன?
இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விளையாடுவதற்காக வீரர்களிடம் ஒருவருக்கொருவர் போட்டி இருப்பது காலங்காலமாய் நடைபெறுவதுதான். சிலருக்கு விளையாட அனுமதி கிடைக்காமல் போகும்போது, வேறொரு வீரரின் பனியனை விளையாட விரும்பும் வீரர் அணிந்து கொண்டு களத்திலிறங்குவது இயல்பாகவே நடைபெறும். அவையனைத்தும் விழா கமிட்டிக்கே தெரியும்.
முதல் பரிசு பெற்ற விராட்டிபத்து கண்ணன், தனது காளையை வாடியில் அவிழ்ப்பதற்காக அலங்காநல்லூருக்கு வந்துள்ளார். விளையாடமுடியாமல் வாடிக்கு வெளியே நின்றிருந்த ஹரிகிருஷ்ணனைப் பார்த்துவிட்டு, உனது பனியனைக் கொடு, நான் விளையாடுகிறேன் என்று களத்தில் இறங்கி விளையாடியுள்ளார். அப்போதுவரை பரிசுக்காக விளையாடுவது, அவரது நோக்கமாக இருக்கவில்லை என்பதும், முதல் சுற்றிலிருந்து இறுதிச்சுற்று வரை களத்தில் நின்று 12 காளைகளைப் பிடித்த வீரர் கண்ணன்தான் என்பதும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கிடையே வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதையும் வருவாய்க் கோட்டாட்சியர் உறுதிபடுத்தியுள்ளார். ஆனாலும் விழா குழுவினரே இறுதி முடிவெடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
வருகின்ற ஜனவரி 30ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மதுரைக்கு வருகைதரவுள்ள நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் அறிவிக்கும் முதல்பரிசு பெற்ற வீரரை, அவரிடம் அழைத்துச் சென்று காருக்கான சாவியும், ஒரு லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் எனத்தெரிகிறது.
இதையும் படிங்க:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டமா? - வெற்றி பெற்ற வீரர் மறுப்பு!