தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்த பார்வையாளர்கள்!

Alanganallur Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண்பதற்கு வருகை புரிந்துள்ள பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

alanganallur-jallikattu-visitors-stranded-without-basic-facilities
அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவிக்கும் பார்வையாளர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 7:28 PM IST

Updated : Jan 17, 2024, 9:17 PM IST

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்த பார்வையாளர்கள்!

மதுரை:உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. காலை 7 மணி அளவில் இந்த போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து 12 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டியை விஐபி கேலரியில் அமர்ந்து கண்டு ரசித்தார். இதில் அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, நடிகர்கள் சூரி, அருண் விஜய், உள்ளிட்ட பலர் விஐபி கேலரியில் அமர்ந்து இந்த போட்டியைக் கண்டு ரசித்தனர்.

பரிதவித்த பொதுமக்கள்:ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வரும் பொதுமக்களுக்குப் பிரத்தியேகமாக மடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், 1 மணி நேரத்திற்குப் போட்டியைக் காணப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் சுமார் 11 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டு விடுவார் எனக் கூறி பாதுகாப்பு கருதி காவல்துறையினர் வேலி அமைத்து பார்வையாளர்களைத் தடுத்து நிறுத்தினர்.

அதன்பின், பல மணி நேரம் ஆகியும் உதயநிதி ஸ்டாலின் வெளியே வராததால், பார்வையாளர்கள் அனைவரும் உச்சி வெயிலில் கூட்டத்தில் சிக்கித் தவித்தனர். இதில், சிலர் முறையாக அனுமதிச்சீட்டு வைத்திருந்தும் அனுமதிக்காத காரணத்தால் எங்களை ஏன் அனுமதிக்கவில்லை? எனக் கேள்வி எழுப்பி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இன்னும் சிலர் அந்த இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதன் காரணமாகக் காலை முதலே பார்வையாளர்கள் நுழையும் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. இது குறித்து போட்டியைக் காணவந்த கரூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கூறுகையில், "என்னுடைய மகள் கடந்த 2 வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டியைக் காணவேண்டும் என்ற ஆசைப்பட்டார்.

இதன் காரணமாக குடும்பத்துடன் இன்று (ஜனவரி 17) போட்டியைக் காணவந்துள்ளோம். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகக் காத்து இருக்கிறோம். ஆனால், இன்னும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காணமுடியவில்லை. இங்குப் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. விழாக்குழுவினர் போட்டியைக் காணவரும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த அமுதா கூறுகையில், "ஜல்லிக்கட்டு போட்டியைக் காண்பதற்கு ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் ஒரு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரை மணி நேரம் போட்டியைக் காண்பதற்கு அனுமதியளிக்கப்படுகின்றன.

ஆனால், கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாகப் போட்டியைக் காணமுடியவில்லை. கடந்த 3 மணி நேரமாக வெயிலில் காத்துக் கொண்டு இருக்கிறோம். ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வெளியூர்களில் பலர் வருகை புரிகின்றனர் அவர்களுக்கு நிழற்கூடை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தொடர் விடுமுறை களைக்கட்டிய வேடந்தாங்கல்.. முப்பதாயிரம் பறவைகளைப் பார்க்கக் குவிந்த பார்வையாளர்கள்!

Last Updated : Jan 17, 2024, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details