மதுரை மாவட்டம், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) கோலாகலமாகத் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு முன்பாக காலை 7 மணிக்கே போட்டி தொடங்கியது. முன்பாக, அலங்காநல்லூர் முனியாண்டி கோயில், கருப்பசாமி கோயில், அரியமலை கோயில் காளைகள் சாமி மாடுகளாக முதலில் அவிழ்த்து விடப்படப்பட்டன. அதன் பின்னர் வீரர்களும், விழாக்குழுவினரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். போட்டியை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
700 காளைகள், 800 வீரர்கள்:
ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று இரவில் இருந்தே அலங்காநல்லூர் கிராமத்திற்கு வருகை தரத் தொடங்கினர். இதில், 700 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். அணி அணியாக மாலை 4 மணி வரை ஒன்பது அணிகள் களத்தில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியிலும் 75லிருந்து 100 வீரர்களும், ஐம்பதிலிருந்து நூறு காளைகள் வரை களத்தில் இறக்கப்படும்.
மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் அலங்காநல்லூர் வாடிவாசல் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதால் மதுரை மாவட்டம் மட்டுமன்றி, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் பங்கேற்கின்றன.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இன்றும், காலையில் இருந்தே காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் மறு மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது.
கார் பரிசு:
போட்டியில் 21 வயதுக்கு குறைவானோர் மாடுகளைப் பிடிக்க அனுமதியில்லை. போட்டியில் பங்கேற்போர் 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. வாடிவாசலில் இருந்து துள்ளி வரும் காளைகளை அடக்கும் காளையர்களுக்குத் தங்கம், வெள்ளிக் காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், ஃபேன், மிக்ஸி உள்ளிட்ட ஏராளமான பரிசுகளும் சிறந்த வீரருக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கும் சிறப்புப் பரிசாக கார், மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்படவுள்ளன. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் வழங்கவுள்ளனர்.