மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள வாடிவாசலில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இது மதுரையின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்றாக உள்ளது. மதுரையிலேயே அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் குறிப்பிடத்தகுந்த பார்வையாளர்களைப் பெற்றிருந்தாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் வாய்ந்ததாகும். இன்றைக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 'உலகப்புகழ்' என்ற அடைமொழியுடன்தான் அழைக்கப்படுவது வழக்கம். அதுமட்டுமன்றி, தமிழகத்தில் அரசு விழாவாக ஜல்லிக்கட்டு ஒன்று நடைபெறுகின்றதெனில் அது அலங்காநல்லூரில் மட்டும்தான்.
வாடிவாசலின் சிறப்பு: எந்த வாடிவாசல்களுக்கும் இல்லாத வகையில் அலங்காநல்லூரின் ஊர் மந்தையில் காளியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில்களுக்கு இடையே அமைந்துள்ள வாடிவாசல் தனிச்சிறப்பு வாய்ந்தது. சற்றே குறுகலாக இருந்தாலும், 'ட' வடிவில் அமைந்த இந்த வாடிவாசல் முன்பு காளைகள் சற்றே நின்று விளையாடும். வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் காளைகள் நேரே வெளியேறாமல் மூலை வரையிலும் சென்று நின்று விளையாடும். ஆகையால் வீரர்களும் துடிப்போடு களமிறங்கி காளைகளின் திமில்களைப் பிடித்து விளையாடுவதற்கு ஏதுவான வாடிவாசல் இதுவாகும். பல்லாண்டுகளாக இங்குதான் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் அறிவிப்பு:இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சட்டசபையில் நடைபெற்ற விவாதங்களின்போது 110 விதியின் கீழ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கென்றே தனியாக பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தார். இது பல்வேறு தரப்பிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
புதிய மைதானம் தேவையில்லை: இதுகுறித்து அலங்காநல்லூர் பொதுமக்களிடமும், ஜல்லிக்கட்டு வீரர்களிடமும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக பேசியபோது, தமிழக அரசின் இந்த அறிவிப்பினை பெரிதும் வரவேற்றனர். ஆனாலும் அலங்காநல்லூரின் தனிச்சிறப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் குரல்களில் தொனித்தது.
தற்போது பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று வரும் காளியம்மன் கோவில் மற்றும் முத்தாலம்மன் கோவில்கள் அமைந்துள்ள மந்தைப் பகுதி வாடிவாசலை மேம்படுத்தவே அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காளியம்மன் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ள திடலில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைவதற்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாடிவாசலை மேம்படுத்த கோரிக்கை: இதற்கு அவர்கள் பின்வரும் காரணங்களை பட்டியலிடுகின்றனர். தற்போதுள்ள வாடிவாசலிலிருந்து வெளியே வரும் காளைகள் 100 அடி தூரத்தில் இடப்பக்கம் திரும்பிச் செல்லும் வகையில் அமைந்திருப்பதால், வீரர்களோடு நின்று விளையாடுவதற்கு ஏதுவாக உள்ளது. பிற வாடிவாசல் அனைத்தும் நேராக அமைந்திருக்கின்ற காரணத்தால், காளைகள் நின்று விளையாட முடியாது. காளைகளும், வீரர்களும் ஒருவரோடு ஒருவர் மல்லுக்கட்டும் விதத்தில், அமைந்துள்ள இயல்பான தற்போதுள்ள அலங்காநல்லூர் வாடிவாசலை மேம்படுத்தினால்தான் பாரம்பரியம் மாறாமல் இருக்கும் என்கின்றனர்.