மதுரை: தைத்திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15ஆம் தேதியான நேற்றும், பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதியான இன்றும் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த நிலையில், நாளை உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணி அளவில் மாடு பிடி வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்குகிறது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் 6 ஆயிரத்து 99 காளைகளும், ஆயிரத்து 784 மாடுபிடி வீரர்களும் தங்களை பதிவு செய்துள்ள நிலையில், நாளை அதிகாலை நடைபெறும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு களத்தில் விளையாடும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.
குறைந்தபட்சம் 10 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தங்க நாணயம், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை, கேஸ் ஸ்டவ், அண்டா, பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோன்று, களத்தில் சிறப்பாக விளையாடும் காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக வழங்கப்படும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.