எம்ஜிஆர் நினைவு நாள்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதிமுக நிறுவனத்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.
அதிமுகவிற்கு நாம் தமிழர் கட்சி ஒரு பொருட்டல்ல...
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் இருந்தார் என்பதால் சீமான் அவரைப் பாராட்டி இருக்கிறார். சீமானுடைய கொள்கைகள் வேறு. எம்.ஜி.ஆரின் கொள்கைகள் வேறு. எம்.ஜி.ஆரின் கொள்கைகள் மக்களுக்கு ஈவது, கொடை அளிப்பது, நல்வழிப்படுத்துவது.
ஆளுங்கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ வருவதற்கு வழி இல்லாதவர் சீமான். எல்லோரும் புரட்சித்தலைவர் ஆட்சியை விமர்சித்தது போல, அவரும் விமர்சிக்கிறார். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற நெகட்டிவ் அப்ரோச் செய்யும் சீமானை நாங்கள் பொருட்படுத்தவில்லை. இந்தப் போக்கால் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இம்முறை குறைவாகவே சீமானுக்கு வாக்குகள் கிடைக்கும்.
ஸ்டாலினுக்கு தேர்தல் பயம்?
மு.க. அழகிரி பிறர் வலியுறுத்தினால் தனிக்கட்சி தொடங்குவேன் எனக் கூறுவது அவரது சொந்த கருத்து. அது அவர்களுக்காக அல்லது மக்களுக்காகவா? என்பது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொங்கல் பரிசோடு இரண்டாயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்குகிறார்.
முதலமைச்சராகும் ஆசையோடு சுயநலத்திற்காக மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து இருக்கிறார். தேர்தல் நெருங்குவதால் மு.க. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது”என்றார்.