மதுரை : அதிமுக எழுச்சி மாநாட்டில் நிறுவப்பட்ட 51 அடி உயர கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றினார். அதிமுக எழுச்சி மாநாடு மதுரை ரிங் ரோடு பகுதியில் நடைபெற்று வருகிறது. மாநாட்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர்.
மாநாட்டு திடலுக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மலர்களை தூவியும், கோஷங்களை எழுப்பியும் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்த எடப்பாடி பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அதிமுக கட்சி தொடங்கிய 51 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 51 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ, கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றினார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வாழ்த்தினர்.
ஏறத்தாழ 2 லட்சம் பேர் வரை கலந்து கொள்ள ஏதுவான வகையில் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டில் இசையமைப்பாளர் தேவாவின் கச்சேரி, உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் தலைவர்கள் உரை நிகழ்த்த உள்ளதாகவும், தொடர்ந்து மாநாடு பந்தலுக்கு வரும் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகளை கவுரவித்து பொற்கிழி வழங்கி, எழுச்சி உரையாற்ற உள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 7.30 மணிக்கு முன்பாக நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தொண்டர்களுக்கு உணவு வழங்க உள்ளன. மூன்று வேளையும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஏறத்தாழ 3 ஆயிரம் சமையல் கலைஞர்கள் சேர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :அதிமுக எழுச்சி மாநாடு - எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு!