மதுரை: கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அக்கட்சி வக்கீல் பிரிவை சேர்ந்தவர்களுடன் மதுரை மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜு நேற்று (ஜூன்.19) ஆலோசனை நடத்தினார்.
திமுக மீது விமர்சனம்
அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜு, ”தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட எல்லா பாதிப்பும் திமுக ஆட்சியில்தான் நடந்தது. கச்சத்தீவு, ஸ்டெர்லைட், முல்லை பெரியாறு, காவிரி உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு திமுக தான் காரணம்.
ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு தயாராக சொல்கின்றனர்.
மேகதாது அணை
மக்களிடம் பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி திமுக மட்டும் தான். இன்று உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிறார் ஸ்டாலின். ஆனால் அதிமுக, மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்து ஒன்றிய அரசுடன் போராடி இருக்கிறது.
’அடிமை அரசு’ என்று விமர்சித்த ஸ்டாலின் டெல்லி சென்று என்ன சாதித்துள்ளார்? ’கோ பேக் மோடி’ என்று திமுக சொன்னாலும், அவரை மரியாதையுடன் நடத்தி இருக்கிறார் மோடி.