மதுரை:மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்தியன் வங்கி வெளியிட்டு இருந்த பணி நியமன வழிகாட்டல்களில் கருவுற்ற காலத்தில் மகளிருக்கு பணி நியமனங்கள் மறுக்கப்படுகிற அம்சம் இடம் பெற்று இருந்தது.
"பெண் தேர்வர் மருத்துவப் பரிசோதனையின் போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வரும் பட்சத்தில், பிரசவத்திற்கு பிந்தைய ஓய்வு காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாக தகுதி அற்றவர் என்று கருதப்படுவார்.
பிரசவம் முடிந்து 6 வாரம் நிறைவு பெற்ற பின்னர், பதிவு செய்யப்பட்ட மருத்துவர் இடமிருந்து உடல் நல தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால், அவர் மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும்" என்ற அந்த வழிகாட்டல் அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை எனவும், அது கைவிடப்பட வேண்டுமெனவும் இந்தியன் வங்கி தலைவர் சாந்திலால் ஜெயினுக்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்.
மீண்டும் கடிதம்
இதற்கு ஜூன் 16ஆம் தேதி அன்று பதில் அளித்த இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் அஸ்வினி குமார் "சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்த அடிப்படையிலேயே பணியில் சேர கால அவகாசம் சிலருக்கு தரப்பட்டது" என்று பதில் அளித்திருந்தார். மேலும், 1987ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையின் சுற்றறிக்கை ஒன்றையும் குறிப்பிட்டு இருந்தார்.