மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லணை. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கல்லணை என்பவர் அங்குள்ள கோயிலில் காவலராகப் பணியாற்றி வந்தார். அந்த கோயிலில் நகைகளை கொள்ளை அடிப்பதற்காக வந்த ஒரு கும்பல், அங்கிருந்த கல்லணையை கொடூரமாகத் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் கண்டுபிடிக்க இயலாத வழக்கு என முடித்து வைக்கப்பட்டிருந்தது. தற்சமயம், குற்றச் சம்பவங்களில் கண்டறியப்படும் விரல் ரேகைகளை ஒப்பிட்டு குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு (National Automated Finger Print Identification System - NAFIS) என்ற மென்பொருள் பயன்பாட்டில் உள்ளது. மேற்படி மென்பொருளைப் பயன்படுத்தி குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சி மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.