தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளில் போராட்டம் - வழக்கறிஞர் பகவத்சிங் - sankaralinganar

உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற அக்டோபர் 13ஆம் தேதி சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று வழக்கறிஞர் பகவத்சிங் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 3, 2023, 2:30 PM IST

அக்டோபர் 13-ஆம் தேதி தமிழ்மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார் வழக்கறிஞர் பகவத்சிங்

மதுரை:தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உயிரிழந்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளான அக்டோபர் 13ஆம் தேதி உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, 100 வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் பகவத்சிங் அறிவித்துள்ளார்.

தமிழ்மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி பல்வேறு காலகட்டங்களில் வழக்கறிஞர் பகவத்சிங் தொடர்ந்து போராடி வருகிறார். இந்த நிலையில், வருகிற அக்டோபர் 13ஆம் தேதி தமிழ் மொழியை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ள அவர், ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது,

2006ஆம் ஆண்டு தொடங்கிய போராட்டம்:கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தமிழ் மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் இயற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பியது. அதனை இதுவரை ஏற்றுக் கொள்ளாமல் அந்தத் தீர்மானத்தையும், கோரிக்கையையும் மத்திய அரசு மறுத்து வருகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து வழக்கறிஞர்களும், பொதுமக்களும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றோம். கடந்த 2010ஆம் ஆண்டு ஏறக்குறைய 11 நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வழக்கறிஞர்கள் நாங்கள் மேற்கொண்டோம்.

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளே இப்போராட்டம் நடைபெற்றது. அதே ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் குடியரசு தினத்தன்று தலைமை நீதிபதி கொடியேற்றும் நாளில் கருப்புத் துணியை வாயில் கட்டி அதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம்.

உச்சநீதிமன்ற கருத்து தேவையில்லை:அதேபோல கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதியின் அறைக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். இதற்காக கைது செய்யப்பட்டு, ஒரு மாதம் சிறைக்குச் சென்றோம். தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக ஓராண்டு பணி செய்வதில் இருந்து தடை செய்யப்பட்டோம். ஆனால், தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் நியாயம் மறுக்கப்பட்டு உயர் நீதிமன்ற மொழியாக தமிழ் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை காரணமாகச் சொல்கிறது. கடந்த 1965ஆம் ஆண்டு அமைச்சரவைக் குழு தீர்மானத்தின்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்க வேண்டும் என்பதை காரணம் காட்டி, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுகிறது.

இதற்கு முறையாக குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதை மத்திய அரசு செய்யவில்லை. ஆனால், அரசியல் அமைப்புச் சட்டமோ அல்லது இந்திய அலுவல் மொழிச் சட்டமோ உச்ச நீதிமன்றத்தில் கருத்து கேட்க வேண்டும் என எந்த இடத்திலும் கூறவில்லை.

மாறாக, இந்தி மொழிக்கு உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தியை நீதிமன்ற மொழியாக்கும்போது உச்ச நீதிமன்றத்தில் கருத்து கேட்டார்களா என்பது தெரியவில்லை. அப்படியென்றால் உச்ச நீதிமன்றம் அதற்கு மட்டும் கருத்து சொல்லி இருக்கிறது. ஆனால், மற்ற மாநில மொழிகள் என்று வரும்போது தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

மொழிமாற்றம் என்னும் மடைமாற்றம்:இந்தச் சூழலில், கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமை நீதிபதி தமிழ்நாடு வந்திருந்தபோது இது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார். அவ்வாறு கோரிக்கை வைக்கும்போது, முன்னர் தலைமை நீதிபதியாக இருந்த ரமணா, தற்போது தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் ஏதாவது ஒரு காரணம் கூறி அவசரப்படாதீர்கள் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.

தலைமை நீதிபதி சந்திரசூட், நாங்கள் மொழிமாற்றம் செய்கிறோம் என்று புதிதாக ஒன்றைச் சொல்கிறார். அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்கிறார்கள். இது குறித்து பார்த்தால் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. அதாவது, இதுவரை 4 ஆயிரம் தீர்ப்புகளை இந்தியில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்.

தமிழில் வெறும் 36 தீர்ப்புகள் மட்டும்தான் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் அவை உள்ளன. ஆக, இவர்களது நோக்கம் மாநில மொழிகள் என்று கூறிக் கொண்டு, இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான். நேரடியாக இந்திக்கும் மட்டும் செய்தால் கேள்வி எழும் என்பதால், மாநில மொழிகள் என்று சேர்த்துக் கொண்டு பெயருக்குச் செய்கிறார்கள்.

ஆளுநரே அறிவிக்கலாம்:அதுமட்டுமன்றி தலைமை நீதிபதி சந்திரசூட், மாநில மொழிகளை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று புதிதாக கூறுகிறார். 1950இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் அந்தந்த மாநில ஆளுநர், அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழியை உயர் நீதிமன்ற மொழியாக அறிவிக்கலாம் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இது மிக எளிமையான நடைமுறை. ஆனால், தலைமை நீதிபதி அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கூறுவது தவறான தகவலாகும். இதற்கு முன்னர் இருந்த தலைமை நீதிபதிகளெல்லாம் நேரடியாக மறுத்து விட்டுச் சென்றார்கள். இவர் நழுவிச் செல்கிறார்.

சங்கரலிங்கனார் நினைவு நாள்:மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தைக் காரணம் கூறிவிட்டு தப்பித்துச் செல்வதால், தொடர்ச்சியான இறுதி கட்டப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதற்காக 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் சேர்ந்து மதுரையில் அண்மையில் கூடி ஒரு முடிவெடுத்துள்ளோம்.

மேற்காணும் அமைப்புகள்தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கோரிக்கைக்காக போராடி வருகின்றன. தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளான அக்டோபர் 13ஆம் தேதியன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 வழக்கறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஒன்று சேர்ந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் நடத்த உள்ளோம்.

இது உயர் நீதிமன்றத்தில் தமிழ் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை இந்த பட்டினிப் போர் நடைபெறும். அடுத்து வருகின்ற நான்கு மாதங்கள், தொடர்ச்சியாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பட்டினிப் போராட்டம் குறித்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரைப் பயணங்கள் நடைபெறும்.

செய் அல்லது செத்துமடி:கடந்த 2015ஆம் ஆண்டு தலைமை நீதிபதி அறைக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும்போது, சிறிய -பெரிய கட்சிகள் என வேறுபாடு பார்க்காமல் அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்தோம். தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் வழங்கி ஆதரவு கேட்டோம்.

இந்த நான்கு மாதத்திலும் அது போன்ற சந்திப்புகள் தொடரும். தேர்தலில் நிற்கும், நிற்காத கட்சிகள், அனைத்து அமைப்புகளிடமும் ஆதரவு கோரி பரப்புரைப் பயணம் மேற்கொள்வோம். இதுவரை நடைபெறாத அளவில் மிக வலுவானதாக இந்தப் போராட்டம் நடைபெறும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இறுதி கட்டப் போராட்டம் இது. சங்கரலிங்கனாரைப் போன்று 'செய் அல்லது செத்து மடி' என்பதாக இருக்கும்.

சுதர்சனநாச்சியப்பன் குழு:கடந்த 1965 அமைச்சரவை தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றக் கருத்துக் கேட்பது அவசியமில்லை என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கடந்த 2014 - 2015ஆம் ஆண்டில் கூடிய சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு, அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்திய அலுவல் மொழிச் சட்டத்திலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்பது தேவையில்லை என்பதையும் கூறியுள்ளது.

மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவும் கூட கூறியுள்ளது. ஆகையால் இன்னமும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்க வேண்டும் என்று கூறி ஏமாற்றாமல், உடனடியாக செய்ய வேண்டும். ஆகையால், தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கான கோப்புக்கு இந்திய சட்ட அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அனைவரின் ஆதரவு:சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் போராட்டம் கிடையாது. இது சமூகநீதிப் போராட்டம். இன்றைக்கு தமிழ் வழியில் படித்தவர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் அனைவரும் முதல் தலைமுறை ஏழை மாணவர்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்காடி வரும் சாதாரண பொதுமக்களுக்கான போராட்டம் இது.

புரியாத மொழி காரணமாக உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கில் என்ன நடைபெறுகிறது என்பதே அவர்களால் தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆகையால், இது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. எனவே, இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும், அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தந்து இந்தக் கோரிக்கை வெற்றி பெற ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:புதிய நாடாளுமன்றத்தில் காத்திருக்கும் அதிர்ச்சிகள்.. டெல்லியில் மதுரை எம்.பி பரபரப்பு பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details