மதுரை மாவட்டத்தை அடுத்த திருமங்கலத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் துறை மேலாண்மை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விண்ணப்ப படிவங்களை வழங்கி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எம்எல்ஏ, மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது பேசிய பரமசிவம் பேசியதாவது, "உலக அரசியல் வரலாற்றிலே தாலிக்கு விலையில்லாமல் தங்கம் கொடுத்த ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டுமே.
கூகுளில் எங்கு தேடி பார்த்தாலும், அமெரிக்க அதிபர்களான ஒபாமா, டிரம்ப் உள்ளிட்ட யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள். அவர்கள் கூட இதையே தான் சொல்வார்கள். இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை மண்ணிற்கு கொண்டுவந்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சருக்கும், வருவாய் துறை அமைச்சருக்குமே சேரும்.
அதிமுக தொண்டர்களோ மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி முளைத்த அற்புதமான 'இலை'. ஸ்டாலினோ ஒரு முதலமைச்சர் வீட்டில் பிறந்து வளர்ந்த தேவையற்ற 'களை'. கோட்டையிலே தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றிக்கொண்டிருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ கோபாலபுரத்தில் தலையில் முடி ஏற்றி கொண்டிருக்கிறார்" என்றார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, "மக்களை எங்களால் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. எனவே தான் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டும், முகக்கவசங்கள் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியுமே வெளியே வருகின்றோம். எல்லாரும் கரோனாவை நோக்கிய கவலையில் உள்ளோம்.
ஆனால், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினோ கவலையோ தனது விக்கை பற்றியதாக உள்ளது. விக் சரியில்லை என்பதற்காக 3 விக் மாற்றியதாக சொல்கிறார்கள். விக்கை வைத்துக்கொண்டு வீட்டில் இருந்து கணிணியை பார்த்து பேசி கொண்டிருக்கிறார். இன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் மண்ணிலே பிறந்த தமிழச்சிக்கு பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் முன்னிறுத்தப்பட்டது நமக்கு பெருமை அளிக்கிறது" என்றார்.