WhatsApp posts: கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "கரூர் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவை தொடங்கி அட்மினாக உள்ளேன். இந்த குழுவில் உள்ள ஒருவர் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சனைகுரிய வகையில் செய்தியை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபரை எனது வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கிவிட்டேன். எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
அப்போது, "தடயவியல் அறிக்கை வரவேண்டியுள்ளது. இந்த நிலையில் முன்கூட்டியே தலையிட முடியாது. குழு உறுப்பினர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பணி அட்மினை சேர்ந்தது. ஆனால், பதிவுகளை முறைபடுத்தவோ, மாற்றியமைக்கவோ, தணிக்கை செய்யவோ முடியாது. உறுப்பினர்களின் பதிவு சட்டத்திற்கு உட்பட்டவையே. உறுப்பினரின் பதிவிற்கு அட்மின் பொறுப்பாக முடியாது என ஒரு வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மனுதாரர் அந்த குரூப்பின் அட்மின் மட்டுமே என்பது உறுதியானால், வழக்கின் இறுதி அறிக்கையில் பெயரை நீக்க வேண்டும். போதுமான ஆவணங்கள் கிடைத்தால் மனுதாரரை வழக்கில் சேர்க்க வேண்டும். வழக்கை மனுதாரர் எதிர்கொள்ள வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:TNPSC Group 4: குரூப் 4 தேர்வுக்கு தமிழ் மொழி கட்டாயம்: 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைமுறைப்படுத்த கோரிக்கை