மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், "ஜூலை 18 ஆம் தேதி அருமனை பகுதியில் உயிரிழந்த ஸ்டேன் ஸ்வாமியின் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசியபோது அரசியல் கட்சி தலைவர்களையும் அரசுகளுக்கு எதிராக பேசியதாகவும், என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் முறையாக காவல் ஆணையரின் அனுமதி பெற்றே நடைபெற்றது.
சட்டவிரோதமாக கூட்டம் நடைபெறவில்லை. நான் பேசிய விவரங்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து ஜூலை 20ஆம் தேதி மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளேன். இதயநோய் உட்பட பல்வேறு உடல் உபாதைகளுடன், வயது முதிர்வாகவும் இருப்பதால் அவற்றைக் கருத்தில் கொண்டு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார். இந்நிலையில் குமரேச தாஸ் என்பவர் ஜார்ஜ் பொன்னையா வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பொன்னையா தரப்பு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதால் வழக்கு மீதான விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:டெல்லியில் அமித் ஷா, அமரீந்தர் சிங் சந்திப்பு!