மதுரை:சோழவந்தானைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சோழவந்தான் வைகை ஆற்றுப் பகுதியில் நாராயணப் பெருமாள் கோயில், சனீஸ்வரர் கோயில், வட்டப்பிள்ளையார் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன.
ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாள் நடக்கும்போது, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார். சோழவந்தானைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது, இங்கு மேலும் கழிப்பறைகள் கட்டப்படுகிறது. இது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக அமையும். ஏற்கனவே இருக்கும் கழிப்பறைகள் முறையாக பராமரிப்பதில்லை. மேலும் வைகை ஆறு மாசு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வைகை ஆற்றங்கரையோரம் வட்டப்பிள்ளையார் மற்றும் சனீஸ்வரன் கோயில் அருகே கழிப்பறை கட்டத் தடை விதிக்க வேண்டும். மாற்றிடத்தில் கழிப்பறை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.