தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் கொலை: கூடுதல் பிரிவுகளை சேர்க்க அனுமதிகோரிய சிபிஐ மனு - விசாரணை ஒத்திவைப்பு - in Sathankulam murder case

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், கூடுதல் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற சிபிஐ தரப்பு மனு விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 3, 2022, 6:14 PM IST

மதுரை:சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீதும், பிரிவு 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்கக் கோரி சிபிஐ தரப்பில், சிபிஐ ஏடிஎஸ்பி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்குப்பதிந்தது. இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை இரண்டு குற்ற பத்திரிகைகள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டு பதிவின்போது, ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீதும் இபிகோ 120 பி (கூட்டு சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்தது. இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனு விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தப்பிரிவுகளில் குற்றம் புரிந்தமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. குற்றவாளிகள் அனைவரும் காவல் துறையைச்சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 120 பி பிரிவிலும், மேலும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (நவ.3) விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. வழக்கில் சாட்சியங்களை விசாரணை செய்து மேலும் ஒரு குற்றப்பத்திரிகை என இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேலும், சில பிரிவுகளை சேர்க்க கீழ்மை நீதிமன்றத்திற்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என விவாதிக்கப்பட்டது.

மதுரை மத்திய சிறையில் இருந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வீடியோ கான்பரன்சில் ஆஜராகி வழக்கில் போதுமான பிரிவுகள் சேர்க்கப்பட்டு விட்டது. மேலும், பிரிவுகள் சேர்க்க அனுமதிக்கக்கூடாது. கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறி, சிபிஐ தரப்பிற்கு எதிர்ப்புத்தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கின் விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: 'தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை..!' - உயர்நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details