தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசியல் திறந்த கதவு... நடிகர் விஜய் அல்ல யார் வேண்டுமானாலும் வரலாம்" - நடிகர் வடிவேலு!

Actor vadivelu condoled: மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு, "அரசியல் திறந்த கதவு போன்றது என்றும் நடிகர் விஜய் அல்ல யார் வேண்டுமானாலும் வரலாம் என்று தெரிவித்தார்.

இயக்குநர் மாரிமுத்து மறைவை முதலில் நம்பவில்லை - நடிகர் வடிவேலு
இயக்குநர் மாரிமுத்து மறைவை முதலில் நம்பவில்லை - நடிகர் வடிவேலு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 10:50 AM IST

இயக்குநர் மாரிமுத்து மறைவை முதலில் நம்பவில்லை - நடிகர் வடிவேலு

மதுரை:திரைப்பட இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி காலை சென்னையில் டப்பிங் பணியில் ஈடுபட்ட போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரின் இறப்பானது திரைத்துறையினர், சின்னத்திரைப் பிரபலங்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பின்னர் மாரிமுத்துவின் உடல், சென்னையில் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை அடுத்து, அவருடன் சின்னத்திரை தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குநர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் அவரது மரணம் குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் சோகத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் வடிவேலு, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாரிமுத்து இறப்பு குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் வடிவேலு பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், "நடிகர் மாரிமுத்து எல்லோரையும் விட்டுச் சென்று விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நேற்று தான் எனது தம்பியின் 13ஆவது நாள் காரியம். என் தம்பியின் மறைவிற்காக எங்கள் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போதுதான் மாரிமுத்து இறந்த செய்தியை கேள்விப்பட்டேன்.

நான் கூட, நாடகத்தின் இறுதி காட்சியில் ஏதும் சாவது போல் நடித்து இருப்பார் என்று முதலில் நம்பவில்லை. கடைசியில் பார்த்தால் குரல் பின்னணி கொடுக்கும் போது மாரடைப்பால் இறந்து இருக்கிறார். இதைக் கேள்விப்பட்டவுடன் மிகவும் கஷ்டமாகிவிட்டது. அவர் என்னோடு ராஜ்கிரண் அலுவலகத்தில் ஒன்றாக இருந்தவர்.

நன்கு நெருங்கி பழகியவர் மாரிமுத்து. அவருடைய படம் தான் "கண்ணும் கண்ணும்". அந்தப் படத்தில் தான் அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள் என்ற வசனம் வரும், அந்த நகைச்சுவையை அவர் தான் உருவாக்கினார். அதே படத்தில் "கிணற்றைக் காணோம்" என்ற நகைச்சுவையும் அவர்தான் உருவாக்கினார். மிகப்பெரிய சிந்தனையாளர். மனது விட்டு சிரிப்பார்.

தற்போது கூட மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனியார் தொலைக்காட்சிக்கு சிரித்து பேட்டி கொடுத்து இருந்தார். நான் அப்போது கூட பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். இவர் இறந்தது திரை உலகத்திற்கே பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாரிமுத்துவின் குடும்பத்தார் இந்த நேரத்தில் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஆறுதல் சொல்ல எங்கள் யாராலும் முடியாது. அந்த மன தைரியம் வருவதற்கு நான் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்" என்றார். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்த கேள்விக்கு, "வரலாம், திறந்த கதவு தானே அது. எல்லோருமே வரலாம். ஏன் நீங்களே வரலாம்" என்று நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

இதையும் படிங்க:அவன் எங்கள் செல்ல மகன்: வீட்டில் யானை வளர்க்கும் கேரள தம்பதி!

ABOUT THE AUTHOR

...view details